search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டனை"

    • இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
    • இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக நர்சுகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

    ஆனால் ஒரு கட்டத்தில் நர்ஸ் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக நர்சுகளை சந்தேகப்பட வைத்தது.

    இதனையடுத்து, நர்ஸ் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக நர்சுகள் அதிர்ந்து போயினர்.

    இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது போலீசாரையே அதிர வைப்பதாக இருந்தது.

    இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

    ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, கடந்த பிப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்லர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக மனகல் அல்-ஒடய்பி பேசி வருவதாக புகார்கள் எழுந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    ரியாத்:

    சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மனகல் அல்-ஒடய்பி. சமூக வலைத்தள பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் தன்னுடைய வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மனகல் அல்-ஒடய்பி மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பேரில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சவுதி அரேபியா கோர்ட்டு அறிவித்துள்ளது.

    • அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
    • கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ஸ்ரீ ராம் அம்பர்லா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார். அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து அந்த மாணவி பகுதி நேரமாக அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு அங்குள்ள பெய்லி நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அம்பர்லா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார்.
    • வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சாவக்காடு திருவத்திரை பகுதியைச் சேர்ந்தவர் மொய்து (வயது 70). இவர் 14 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

    நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் சாவக்காடு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மொய்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் மொய்துவுக்கு ஆயுள் தண்டனையும், 64 ஆண்டுகள் கூடுதல் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சிறை தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் தனது குடும்பத்தினரை பார்க்க பரோலில் செல்ல சட்டப்படி அனுமதி உள்ளது. அவசர விடுப்பு மற்றும் சாதாரண விடுப்பு என இரண்டு வகை பரோல்களில் கைதிகள் சிறையில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.

    குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மருத்துவ சான்றிதழ் மற்றும் காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் கைதிகளுக்கு அவசர விடுப்பு வழங்கப்படும். இரண்டு வருட சிறை தண்டனையை முடித்த கைதிகளுக்கு பரோல் வழங்கப்படும்.

    ஒரு நபர் ஒரு வருடத்தில் மொத்தம் 60 நாட்கள் பரோலில் செல்லலாம். அதனை வருடத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரள சிறைச்சாலைகளில் பரோலில் வெளியே சென்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் திரும்பி வரவில்லை. அவர்கள் அப்படியே தலைமறைவாகி விட்டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 4 மத்திய சிறைச்சாலைகள் மட்டுமின்றி, 3 திறந்தநிலை சிறைச்சாலைகள், 3 பெண்கள் சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 15 சிறப்பு நிலை சிறைச்சாலைகள், 16 துணை சிறைச்சாலைகள் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் இருக்கின்றன.

    இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதிகள் 67பேர் சிறைக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் பரோல் முடிந்து திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டனர்.

    இவர்கள் அனைவருமே கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். மற்ற குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 3 கைதிகளும் இதே போல் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து கேரள சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 70 கைதிகள் மாயமாகி இருக்கிறார்கள். அவர்கள் 70 பேரும் மாயமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.

    நெட்டுக்கல்தேரி திறந்தவெளி சிறையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு ராமன் என்ற கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமானார். அவர் மாயமாகி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அதேபோன்று கடைசியாக 2022-ம் ஆண்டு அனில்குமார் என்ற ஆயுள் தண்டனை கைதி பரோலில் சென்ற நிலையில் மாயமாகி விட்டார். அவரும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பரோலில் சென்று மாயமான கைதிகள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருப்படுகிறது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தலைமறைவாக வாழ்ந்து குற்ற செயல்களில் எதுவும் ஈடுபடுகிறார்களா? என்பதை சிறைத்துறை மற்றும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கேரளாவில் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

    கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார். 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7-ந்தேதி விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    ×