என் மலர்
நீங்கள் தேடியது "bribe"
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.
இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.
3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் சான்று வழங்காமல் அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளை அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஒரு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக ரூ.100 வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விவசாயி ஒருவர் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்கு சென்றதும் அதற்கு வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ரூ.100 லஞ்சம் வாங்குவதை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கொள்ளும் காட்சியும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே வி.ஏ.ஓ. மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததாக கூறி ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார். சரவணன் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் நடராஜன் ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறு கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சரவணன் ரூ.30 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுக்க முயன்றார். அந்த தொகையை தான் பெற மாட்டேன் என்றும், ரூ.70 ஆயிரம் தான் தர வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் கூறினார். ஆனால் ரூ.70 ஆயிரம் கொடுக்க விரும்பாத சரவணன் இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை சரவணன், நேற்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் நடராஜனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடந்தது. கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சேலத்தை அடுத்து உள்ள தாசநாயக்கன் பட்டி லட்சுமி நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் நடராஜன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனாலும் அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஒருவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். இங்கும் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கின்றனர். பணம் வாங்கியவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனையுடன் கூறினர்.
இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்தவர், ரவிசந்திரன். இவர் ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அந்த நிறுவனத்தின் அதிபர், நேற்று ரவிசந்திரனிடம் வழங்கினார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று ரவிசந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். மேலும், சென்னை மற்றும் டெல்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓலையூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் அருள் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் 2 கால்களும் செயலிழந்தவர்.
ராமலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை பெயரில் உள்ள வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, சிட்டா ஆகியவற்றை தனது பெயருக்கு மாற்ற அருள் பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார்.
இந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருள்பாண்டியனை, வி.ஏ.ஓ. சுமதி சில நாட்கள் அலைக்கழித்து வந்துள்ளார். இது பற்றி கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா, சிட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அருள்பாண்டியன் அவ்வளவு பணம் என்னால் தரமுடியாது என்று கூறிய போது, ரூ.1000 தர வேண்டும் என்று சுமதி கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள் பாண்டியன், இது பற்றி அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுமதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அவர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுமதியிடம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுமதி அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews