search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரபதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்- சேலத்தில் கைதான சார்பதிவாளர் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
    X

    பத்திரபதிவுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்- சேலத்தில் கைதான சார்பதிவாளர் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

    • ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வீரபாண்டி அடுத்த கொழிஞ்சிப்பாடி பகுதியில் தனது தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    அதன்பேரில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த புரோக்கர் கண்ணன் ஆகியோர் பழனிவேலின் தாயாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டனர். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பழனிவேல், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நேற்று மதியம் உடையாப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது புரோக்கர் கண்ணனிடம், பழனிவேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

    பிறகு அவர் அந்த பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் ஜெயிலில் அடைப்பதற்காக நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 2 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார், புரோக்கர் கண்ணனை ஜெயிலில் அடைத்தனர். சார்பதிவாளர் செல்வபாண்டியனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பரிசோதித்து வார்டு அறையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்புக்காக அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது பற்றி போலீசார் கூறுகையில், சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு சிகிச்சை முடிந்ததும், உடல் நிலை சீராகி விட்டது என டாக்டர்கள் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

    Next Story
    ×