search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia"

    • மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
    • மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."

    "மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    • தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
    • உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர்.
    • ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டை சங்கத்தினர் 3 நாள் பயணமாக மலேசியா செல்கின்றனர். கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இண்டஸ்ட்ரியல், பிளாஸ்டிக், சித்தா, பேப்பர், என்ஜினியரிங் ஆகிய 5 தொழில்துறை சார்பில் தொழில்களை பெருக்கு வதற்காகவும், தொழில் முன்னேற்றம் அடைவ தற்காகவும் மலேசிய தூதரகம் வர்த்தக பிரிவு வான் அகமத் தர்மேஷ் இடிஸ் ஏற்பாட்டில் 15 பேர் கொண்ட குழு இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல உள்ளனர்.

    இதுகுறித்து கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    கப்பலூர் தொழிலதிபர் சங்கத்தின் சார்பாக 15 பேர் கொண்ட குழு மலேசியா வர்த்தகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நாளை செல்கிறோம். கப்பலூர் தொழிற்பேட்டை அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இதனை கருதுகிறோம். மலேசியா பயணம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மலேசியாவில் உள்ள வர்த்தகத்துடன் 25 பேர் கொண்ட குழு சேர்ந்து நாங்களும் வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோம்.

    மலேசியாவில் உற்பத்தி யாகும் பொருட்களை கோலாலம்பூரில் மலேசிய அரசு கண்காட்சி வைத்துள் ளது. அதனை பார்வையிட செல்கிறோம். மலேசியா பயணம் கப்பலூர் தொழில் பேட்டையை விரிவுபடுத்த உபயோகப்படும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
    • இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி

    மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    அந்த வீடியோவில் காணப்படுவது:-

    அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.

    அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.

    அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).

    இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

    "எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.

    சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
    • மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம். 

    இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.

    மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    • நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

    இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகள் மேற் கொள்ளப்பட்டன.
    • சுகோய் போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம்.

    குவான்டன்:

    இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.

    உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன.

    நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின. 


    இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

    இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளில் இரு விமானப்படைகளும் பங்கேற்பு.
    • இருநாட்டு பாதுகாப்பை ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.

    இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது.

    உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

    இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.

    இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

    நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன.

    உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey
    கோலாலம்பூர்:

    இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார்.  #India #Malaysia #Hockey
    இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey
    கோலாலம்பூர்:

    இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.
    மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதிய விபத்தில் சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 11 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். #Malaysia #BusAccident
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக்கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.

    பின்னர் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

    35 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.   #Malaysia #BusAccident
    ×