search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal District News"

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், தேன், விபூதி , கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம்

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் கோவில், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    அபிஷேகம்

    பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ர மணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜாசாமி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவில் பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த நவ. 22-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று 30-ந் தேதி முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    • சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துகாளிப்பட்டியை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த சதீஷ் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினரும், கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ், கபிலக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பழனிசாமி , ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்படும் தினசரி அங்காடிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு தினசரி சந்தை என பெயர் வைத்து நினைவு வளைவு அமைக்க சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான 84 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து தீர்மானங்களின் மீது உறுப்பினாகள் பேசியதாவது:-

    10-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ராஜவேல்: 400 பஸ்கள் வந்து செல்லும் வசதி கொண்ட பஸ் நிலையம் இருக்கும்போது புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுவதாக அறிகிறோம். அதற்கு பதிலாக நகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள் கட்டினால் நகராட்சிக்கு வருமானம் வர ஏதுவாக இருக்கும்.

    நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு: திருச்செங்கோடு நகரின் வளர்ச்சி நிலையையும் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் பஸ்கள் அதிகமாக உள்ளே நுழைவதால் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு இடம் தேர்வு நடந்து வருகிறது. தற்போது உள்ள பஸ் நிலையம் எப்போதும் போல் இயங்கி வரும்.

    18-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ரவிக்குமார்: நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து பூமி பூஜைகள் போடும்போது நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காததால் ஒரே திட்டத்திற்கு நகராட்சி நிதியும், எம்.எல்.ஏ. நிதியும் ஒதுக்கும் குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. எனவே இதனை அதிகாரிகள் கவனித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து சீர்படுத்த வேண்டும்.

    20-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முக வடிவு:

    கூட்டப்பள்ளி பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே நிழற்குடை இருந்ததை அகற்றிவிட்டு தான் சாலை விரிவாக்க பணி நடந்தது. எனவே அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    5-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜா: எனது வார்டு பகுதியில் நெசவாளர் காலனி பள்ளியில் 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி கல்வி நிதியிலிருந்து 6 வகுப்பறைகள் கட்டித்தர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு: உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டத்தின்படி வரும் டிசம்பர் 8-ந் தேதி 1 முதல் 8 வார்டுகளுக்கு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் நகராட்சி தேவைகள் மட்டுமல்லாது அனைத்து துறைகள் சார்ந்த பட்டா மாறுதல், பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், தனி நபர் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் மனு கொடுத்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய பதில் வழங்கப்படும். எனவே இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் துண்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை 1 முதல் 8 வார்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் நகர்மன்ற உறுப்பினர்கள் வழங்கி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர்.
    • கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 38,334 மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று உள்ளனர். இவர்களில் 19,410 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 18,924 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிரமம் இல்லாமல் கிடைக்க பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் (தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் தவிர) மூலம் மிக குறைவான சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாக கொண்ட மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்து றையின் சார்பில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

    குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் ரோட்டில் உள்ள ஸ்பெக்ட்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

    கலை போட்டிகள் காலை 10 மணிக்கு நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் 5 வர்ணங்கள் ராகம், சுரத்துடன் 5 தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.

    தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப் படுவார்கள். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.
    • இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம்.

    முத்திரைத்தாள்

    நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள்

    தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.
    • இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் -2023 தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    கபடி

    இப்போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5,000 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடத்தப்பட உள்ள விளையாட்டுகள் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால் , பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மல்லக்கம்பு, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், ஹாக்கி, களரிபயட்டு, கபடி, ஜூடோ, கோ-கோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் உள்ளிட்டவைகள் ஆகும்.

    தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

    பங்கேற்பதற்கு தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது சரிபார்ப்பு (01.01.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்விச்சான்றிதழ்

    ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப் பட்டது) ஆகியவை ஆகும்.

    தமிழ்நாடு அணிகளில் இடப்பெறுவதற்கான தேர்வு குறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நேரில் அணுகவும். பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு சில மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒட்டமெத்தை பகுதியில் உள்ள டீ கடை, மற்றும் ஆர்.எஸ். சாலையில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வந்த பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து 5½ கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் எழுந்தருளியுள்ள பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த வருடமும் பால அய்யப்ப சாமி கோவிலில் கணபதி ஹோமும், 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாலஅய்யப்ப சாமி அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலஅய்யப்பசாமி கோவில் பவுர்ணமி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×