search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school vehicles"

    • பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறைகளை அறிந்து முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனத்தினை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், பள்ளி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பான முறையில் ஏற்றி இறக்கிச்செல்ல கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ வேகத்தில் மிகாலும், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50கி.மீ என்ற வேகத்தில் மிகாமலும் இயக்கப்பட வேண்டும். 2023-2024 கல்வி ஆண்டில் இம்மாவட்டத்தில் கூட்டாய்வு செய்து சரியாக உள்ள பள்ளி வாகனங்கள் கீழ்கண்ட ஸ்டிக்கர் மூலமாக வாகனத்தினுடைய காற்றுத்தடை கண்ணாடியில் ஒட்டப்பட அறிவுறுத்தி அதன்படி ஒட்டி இயக்கப்படுகிறது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
    • வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 570 பள்ளி வாகனங்கள், தெற்கு வட்டாரத்தில் 616, தாராபுரத்தில் 208, உடுமலையில் 260 என மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.

    பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.பள்ளிகளின் நிலை, படிக்கட்டு உயரம், பஸ்களில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி வசதி, இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதிச்சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுவரை நடந்த ஆய்வில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், இன்னமும் சான்றிதழ் பெறாமல் உள்ளன. இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.திருப்பூர் வடக்கு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  

    • பள்ளி வாகனங்களை கவனத்தோடு இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 388 பள்ளி வாகனங்கள் உள்ளன. அதில் இன்றைய தினம் 298 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் அதனை இயக்குவதற்கு முன்பு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஓட்டுனர்கள் வாகனத்தை கவனத்துடனும், அனுமதிக் கப்பட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும். வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைப்பேசி பயன்படுத்துதல் போன்ற செயல்முறைகள் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு குழந்தைகளை மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர்கள் தீயணைப்பது குறித்த பயிற்சியும், முதலுதவி குறித்த பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநகர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.

    மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
    • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் உள்ள பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பல்லடம்,காங்கயம் பகுதியைசேர்ந்த 350 பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு பல்லடம் கரையாம் புதூர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வாகனங்களை திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசரவழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வு செய்யப்பட்ட 350 வாகனங்களில், 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் வரும் 29ந் தேதி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறை குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேல்மணி, ஈஸ்வரன், மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுப்பணியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் விறுவிறுவென ஏறி இறங்கினார். அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாய் உடன் சென்றனர்.

    • பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    135 பள்ளி வாகனம்

    இந்நிலையில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளை சேர்ந்த 511 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் வேகக்க ட்டுபாட்டு கருவி, கண்காணிப்பு காமிரா, முதல் உதவி பெட்டி, வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசர கால வழி, தீயணைப்பு கருவி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உளளதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் டிரைவர்களுக்கு 108 மருத்துவ குழுவின் மூலம் முதல் உதவி சிசிக்சை பற்றிய விளக்கம் மற்றும் தீயணைப்பு துறை மூலம் டிரைவர்களுக்கு அவசர காலத்தில் தீயணைப்பானை பயன்படுத்தும் முறைப்பற்றி செயல்முறை அளிக்கப்பட்டது.

    டிரைவர்களுக்கு அறிவுரை

    மாணவர்களை பாது காப்பாக ஏற்றிச் சென்று விபத்தில்லாமல் இயக்குமாறும் மற்றும் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிற்கு மாறும் அறிவுறுத்தப்பட்டது.

    மாணவர்களை விழிப்புணர்வோடு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.

    • ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது.
    • பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர், பள்ளி பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை டிரைவ், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    கோவில்பட்டி:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி வாகனங்கள் ஆய்வு

    அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார் பகுதியில் உள்ள 40 பள்ளிகளில் 265 பள்ளிகளை சேர்ந்த 137 வாகனங்கள் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், ஆர்.டி.ஓ. மகாலெட்சுமி, தாசில்தார் வசந்தமல்லிகா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் விஷ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளபட்டது.

    பாதுகாப்பு அம்சங்கள்

    ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது. மேலும் கதவு, படிக்கட்டுகள், ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண்கள், நிறம், கண்காணிப்பு காமிரா, வேகக் கட்டுபாட்டு கருவி உள்ளிட்டவை முறையாக இடம் பெற்றுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

    சில வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டு உடனடியாக அதை சரி செய்து கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மத்தியில் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர், பள்ளி பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை டிரைவ், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    • அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந் தேதி நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் 360 பள்ளி வாகனங்களும், அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளி திறக்க உள்ள நிலையில் பள்ளி பஸ்களின் ஆய்வை மே இறுதிக்குள் முடிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் வடக்கு , அவிநாசி வட்டாரத்துக்குட்பட்ட 590 பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பஸ்களின் கண்டிஷன், பள்ளி பஸ்களில் படிக்கட்டுகளின் உயரம், பின்புறம், இடதுபுறம், மற்றும் வலது புறம் உள்ள அவசர கால வழி, விபத்து ஏற்படும் வானங்களில் முதலுதவி வசதி, மாணவ மாணவியர் இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதி சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது.

    • மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது.
    • உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிவாகனங்களில், தமிழ்நாடு மோட்டார் வாகன(பள்ளி வாகனங்கள் முறைமைபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012, விதிமுறைகள் உரியமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுஅமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.

    கல்வி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    பொன்னேரி:

    கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

    பள்ளி வாகனங்கள் சரியான பராமரிப்பில் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள 34 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான சுமார் 400 வாகனங்கள் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    பள்ளி வாகனங்களில் விதிமுறைகளின்படி கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் கருவி, மற்றும் அவசர கதவு, தீயணைப்பான், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டது.

    அப்போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    நேற்று ஆய்வு செய்த 126 வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படாத 35 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறியதாவது:-

    விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் இல்லாத டிரைவர்களை பணியமர்த்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளி நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை முறையாக பாரமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. முதற்கட்டமாக தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 78 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டன.

    திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ. சத்யா, மாட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். இதில் 5 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளை பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களில் தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? மற்றும் வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்வதற்கான தகுதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 பள்ளி வாகனங்களில் தற்போது 85 பள்ளி வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையில் 5 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு டிரைவர்கள் எழுத்து பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் டிரைவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு போல நடப்பு கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு பள்ளி வாகன டிரைவர்கள்் செயல்பட வேண்டும் என்பது குறித்த தீயணைப்பு வீரர்களின் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் வட்டார போக்கு வரத்து அதிகாரி செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி வாகன டிரைவர்கள் உடன் இருந்தனர். 
    தகுதிச்சான்று பெறாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விழுப்புரம்:

    கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக உள்ளதா? என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வகையில் மொத்தம் 1,073 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இந்த வாகனங்களை ஒவ்வொன்றாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகள் ஏறவும், இறங்குவதற்கும் ஒருவழி கதவு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால கதவு பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, பள்ளி வாகனங்களின் முன், பின் பகுதிகளில் பள்ளி வாகனம் என்றும், வாகனத்தின் இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், வலதுபுறத்தில் பள்ளியின் பொறுப்பாளர் பெயர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், இணையதள முகவரி, போலீஸ் நிலைய தொலைபேசி எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கிறதா? என்றும் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 210 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,073 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 724 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்வதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படும். தகுதிச்சான்று பெறாத வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி மாணவர்களை ஏற்றிச்செல்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுதவிர மாதந்தோறும் ஒவ்வொரு பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து போக்குவரத்து விதிப்படி முறையாக செயல்படுகிறதா? என்று கண்காணிக்க வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள், வேன்கள் அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி ஏற்றிச்சென்றால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள், வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், உதவி கலெக்டர்கள் (பயிற்சி) காயத்திரி, வித்யா, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, குண்டுமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 
    ×