என் மலர்
இந்தியா

SIR நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு மனு
- உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 68,000 பாதுகாப்பு ஊழியர்களுடன் கூடுதலாக 1,76,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த கட்டாயமும் இல்லை.
கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், உள்ளாட்சி தேர்தல்களுடன் SIR-ஐ நடத்துவது நிர்வாக சவால்களை ஏற்படுத்தும் என்றும், உள்ளாட்சி தேர்தல்கள் சுமூகமாக நடத்துவதற்கு தடையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,
கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 தொகுதி பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகள் என மொத்தம் 1,200 உள்ளூர் பொது அமைப்புக்கள் உள்ளன. இவை மொத்தமாக 23,612 வார்டுகளை உள்ளடக்கியது. டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன.
நவம்பர் 4-ந்தேதி SIR தொடங்கியது. டிசம்பர் 4-ந்தேதி வாக்காளர் வரைவு பட்டியல்கள் வெளியிட திட்டமிடப்பட்டது. முழு திருத்தத்தையும் செயல்படுத்த ஒரு மாதம் மட்டுமே மீதமுள்ளது. இந்த காலக்கெடு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 68,000 பாதுகாப்பு ஊழியர்களுடன் கூடுதலாக 1,76,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். SIR-க்கே கூடுதலாக 25,668 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் வழக்கமான வேலைகள் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
அரசியலமைப்பின் பிரிவுகள் 243-E மற்றும் 243-U, கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிரிவு 38 மற்றும் கேரள நகராட்சி சட்டத்தின் பிரிவு 94 ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகும் உறுப்பினர்கள் டிசம்பர் 21-க்கு முன் பதவியேற்க வேண்டும்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த கட்டாயமும் இல்லை என்றும், உடனடி SIR தேவைப்படுவதற்கு எந்த சிறப்பு காரணங்களையும் தேர்தல் ஆணையம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளது.
கேரள உயர்நீதிமன்றம் முன்னதாக SIR-க்கு தடை விதிக்க மறுத்து, தொடர்புடைய மனுக்களை ஏற்கனவே விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு SIR வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், அடுத்ததாக நவம்பர் 26-ந்தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.






