search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant ivory"

    • யானை தந்தம் கடத்தல் வழக்கில் தங்க இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    • கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா, மதுரை பதிவெண் கொண்ட வாகனங்களில் மர்மநபர்கள் சுற்றி வந்தனர். வனத்துறையினர் சோதனை நடத்தியபோது தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 2 யானை தந்தங்கள், கார்கள், செல்போன், நாட்டுதுப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்தனர். இதில் கைதான கேரளாவை சேர்ந்த அப்துல்ரசீத், சிபின்தாமஸ் ஆகியோர் மீது கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சிபின்தாமஸ் பெருமாள்மலை அருகே தங்கும் விடுதி நடத்தி வருவதாகவும், அங்கு பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் தப்பிஓடிய பாலமலையை சேர்ந்த சார்லஸ் என்பவரை தேடி வந்த நிலையில் அவர்களுக்கு இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த முகமதுசபிக்(30) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சார்லசிடம் கொடுத்து சமைத்து கொடுக்க சொன்னதால் அங்கு தங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே இந்த கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×