search icon
என் மலர்tooltip icon

  கோயம்புத்தூர்

  • பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.
  • பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார்.

  கோவை:

  வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார். கூட்டணி இல்லாமல் அவர் அதிகமான வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இதற்காக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.

  பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்களின் நலனுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட கூடுதலாக பணியாற்றுவார்.

  கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் பேசியவர்கள் தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஆட்சியை பிடிப்பதாக கனவு கண்டு வருகின்றனர். நாங்கள் 40 இடத்தை பிடித்து விட்டோம், பாராளுமன்றத்தில் பாருங்கள் என கூறுவதால் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது தென்னிந்தியாவில் ஏற்கனவே காலை பதித்து விட்டோம் தமிழகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

  பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார். ஆனால் தமிழக அரசின் மின் கட்டண, பத்திரப்பதிவு உள்ளிட்ட விலை உயர்வால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். இனி சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வியூகங்களை வகுத்து பணிகளை தொடங்க உள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அத்துமீறல்.
  • மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  ஈஷா சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  இதைதொடர்ந்து, காவல்துறையினரும், கிராம மக்களும் குண்டர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

  இதுதொடர்பாக, ஈஷா சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.

  இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். 

  அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

  ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.

  இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.

  இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

  இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

  ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார்.

  மேலும், இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

  இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

  மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை கேட்டுள்ளது.

  இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.

  இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

  அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
  • மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

  கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார்.

  நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி.

  40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர்.

  திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.

  மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

  பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று சொன்னார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை தலைகுனிய வைத்துள்ளோம்.

  இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி.

  வாயால் வடை சுடுவதெல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருத்துகளால் சுடுவார்கள். 237 எம்பிக்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவால் நினைத்ததை செய்ய முடியாது. மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

  நாடாளுமன்றத்தில் 9695 கேள்விகளை எழுப்பியவர்கள் எங்கள் எம்பிக்கள்.

  நாடாளுமன்றத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 40 எம்பிக்கள் செயல்பட வேண்டும்.

  பாஜகவை பாசிசி பாதையில் செல்ல விடாமல் எம்பிக்கள் தடுக்க வேண்டும். எப்போதும் கட்சி பற்றியே சிந்தித்த தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா பரிசே இந்த 40க்கு 40.

  விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், திமுக வேட்பாளர் தான் வெற்றி பெற போகிறார். தொடர் வெற்றி, இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது.

  எங்களை நம்பி பொறுப்பு கொடுத்துள்ள மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
  • கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

  பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

  எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. 

  இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.

  மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

  இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.

  கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

  ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.

  இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

  முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.

  2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.

  மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
  • கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம்.

  கோவை:

  கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:

  தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட். கிட்டத்தட்ட 11 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளனர்.

  உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவிலை வைத்தே இந்த தேர்தலை அவர்கள் சந்தித்தார்கள். அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோற்று இருக்கிறார்கள்.

  மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உத்தரபிரதேசத்திலேயே அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்து உள்ளனர்.

  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

  அடுத்து வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும். எங்களை பொறுத்தவரை நாங்கள் தனி இயக்கம். எங்களுக்கு என்று ஒரு சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

  நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 8 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.

  8 விழுக்காடு என்பது அண்ணன் சீமானின் விடாமுயற்சி, பல வருட உழைப்பு, இயக்க தோழர்களின் உழைப்பால் கிடைத்துள்ளது.

  கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம். கொள்கைகள், சித்தாந்தங்கள்படி நாங்கள் வேறுபடுகிறோம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

  • புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.
  • தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

  கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.

  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் திரண்டு வரவேற்றனர். புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர்.

  கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவினாசி சாலை நீலாம்பூர் பகுதிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்பு மாலை நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்பு இரவு 7.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.

  • சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
  • மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

  கோவை:

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தலைவர் சஞ்சய் கும்பட் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

  டி.என்.பி.எல். 8-வது கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

  லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

  குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

  இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

  இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  பேட்டியின்போது தமிழ் நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி, இணை செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா உள்பட கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது.
  • போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

  கோவை:

  பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் முத்துசாமி வரவேற்கிறார்.

   இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

  இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பங்கேற்க வருபவர்கள் அமர வசதியாக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

  இதற்காக விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது. அவர்கள் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். இதன் காரணமாக கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

  • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
  • பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  கோவை:

  தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் இமாலய வெற்றியை பெற்றது.

  இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

  கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.

  இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.


  விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் கோவைக்கு வருகை தருகிறார்.

  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவைக்கு வருகிறார். அவர் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

  அதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை கொடிசியாவில் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.

  முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.


  நாளை கோவையில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைமை செயலாளர் துரைவைகோ எம்.பி., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதே போல கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

  இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

  முப்பெரும் விழாவையொட்டி விழா மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  இன்று மைதானம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோல விழாவுக்கான மேடையில் அலங்காரங்களும், மின் அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.