என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi Employees"

    • கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது.

    கோவை:

    தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவியாளர் நிலையில் ரூ.16 ஆயிரத்து 500, சமையலர் மற்றும் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.5 ஆயிரத்து 700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு மாவட்ட தாசில்தார் அலுவலகம் அருகில் சாமியானா பந்தல் அமைத்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், இரவிலும் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.

    கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், அங்கிருந்து நேராக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களை போராட்ட களத்தில் சந்தித்தார்.

    அப்போது அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்ட பந்தலில் தரையில் அமர்ந்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் ஓய்வு பெறும்பொழுது வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே தங்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்றி தர வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தங்கள் கோரிக்கைகள் எதுவும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.

    அதற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

    தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், அவர்களிடம் சட்டசபையில் இதுகுறித்து குரல் எழுப்பப்படும் என்றார். அவர்களுக்கு போராட்ட களத்தில் இருந்தவர்கள் நன்றி கூறினர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    • திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்க வேண்டும், மேலும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளை போல மே மாதம் முழுவதும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியப்படி திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். 

    • அரசு ஊழியரை போல் மகப்பேறு விடுப்பு 1 வருடம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல், பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க மே மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்க ளுக்கு விடுமுறை வழங்கிட வும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம், 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடன் பதவி உயர்வு, 10 வருடம் பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்கவும், குறுமையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தைகள் வருகை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிடவும், பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஊழியர்களுக்கு லோன் வழங்க வேண்டும், பணி ஒய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்குமாறும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்காண காலிப் பணியிடங்களை உடளே நிரப்பிடவும், மகப்பேறு விடுப்பு அரசு ஊழியரை போல் 1 வருடம் வழங்கிடவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவீனத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தென்காசியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். சண்முக சுந்தரி, லெட்சுமி, செல்லத்துரைச்சி, ராதா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொருளாளர் சி.ஐ.டி.யு. தர்மராஜ் ,மாவட்ட செயலாளர் தேவி ஆகியோர் விளக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர்அயூப்கான், சி.ஐ.டி.யு. மார்த்தாண்ட பூபதி, மாவட்ட துணை தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாடசாமி, மாவட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், மாவட்ட செயலாளர் ராஜசேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் , சங்கத்தினர், மாவட்ட செயலாளர் சி.ஐ.டி.யு. மணிகண்டன் ஆகியோர் நிறைவுரை யாற்றினர். மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    ×