search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fare hike"

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விரைவு பஸ்கள் பெரும்பாலும் 'அல்ட்ரா டீலக்ஸ்' வகையை சார்ந்தது. 2 இருக்கைகள் கொண்டதாக இவை உள்ளன. இதனால் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.

    இதனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். மாறாக கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், "ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது" என்றார்.

    • ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய ஆம்னி பஸ் கட்டணம் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, கேரளா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.1500 வரை கூடுதால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

    மைசூர், எர்ணாகுளத்துக்கு ரூ.3500 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி. இருக்கை மற்றும் படுக்கை உள்ளிட்ட வசதியை பொறுத்து பயணிகளிடம் ரூ.1250 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். விதி முறைகளை மீறி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தால் உடனடியாக இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த கட்டணத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
    • போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கருமத்தம்பட்டி:

    சுங்க கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

    கோவை கருமத்தம்பட்டி அருகே கோவை-அவி்னாசி மெயின் ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க முடியாமல் தவித்தன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.

    கைதானவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார்
    • விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது துகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை, நெய்வேலியில் நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நீர்நிலைகள் மாசுபட்டு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கடலூர் மாவட்ட கலெக்டர், விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கு ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார் மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்   சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததுபடி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும் இதுவரை எடுக்கப்படவில்லை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு வருங்காலத்தில் 15000 மெகாவாட் உற்பத்தியில் செய்யப் போவதாக அறிவித்துள்ளது,

    இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதுற்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்குஅறிக்கை அளித்துள்ளேன் விரைவில் நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது, மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் எனவும் விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையால் தான் அதிகமாக குற்றங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • கொடைரோடு மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.

    கொடைரோடு:

    தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.

    அதன்படி கொடைரோடு டோல்கேட்டில் கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.65 லிருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரேநாளில் பலமுறை பயணிக்க ரூ.95 லிருந்து ரூ.110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணம் ரூ.1935 லிருந்து ரூ.2215ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனம் ஒருமுறை பயணிக்க ரூ.170லிருந்து ரூ.195ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.3385லிருந்து, ரூ.3880ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டிரக், பஸ் ஆகிய வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.225லிருந்து ரூ.260ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.340லிருந்து ரூ.390ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் மாதாந்திர கட்டணம் ரூ.6770லிருந்து ரூ.7760 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.365 லிருந்து ரூ.415ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.545லிருந்து, ரூ.625ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.10880லிருந்து, 12470ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் கார்,வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.115-ம், பலமுறை பயணிக்க ரூ.170ம், மாதாந்திர கட்டணம் ரூ.3415ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.200, பலமுறை பயன்பாட்டிற்கு ரூ.300, மாதாந்திர கட்டணம் ரூ.5975ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரக், பஸ்களுக்கு ஒருமுறை ரூ.400, பலமுறை ரூ.600, மாதாந்திர கட்டணம் ரூ.11955ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை ரூ.640, பலமுறை ரூ.960, மாதாந்திர கட்டணம் ரூ.19210 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளின் சட்ட விரோதக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே சட்டவிரோதமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

    சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த கட்டண உயர்வு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ முதல் 150 கி.மீ வரை இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 50 சதவீதம் பேருந்துகள் விரைவுப் பேருந்துகள் என மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல், 150 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 20 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

    சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பேருந்துகளில் இதுவரை ரூ.152 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 15சதவீதம், அதாவது ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.175 வசூலிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை மார்க்கங்களிலும் 15சத வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலான கட்டணம் 20சதவீதம் அதாவது 72 ரூபாயிலிருந்து ரூ.86 ஆக உயர்ந்துள்ளது. நகரப்பேருந்துகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் எல்.எஸ்.எஸ் வகை பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு, ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



    போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கும் போதும் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதென்பது நிர்வாகத்திறன் அல்ல. மாறாக எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் செலவுக்கு ஏற்றவாறு வரவை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதென்பது வரவு- செலவு கணக்கில் மட்டும் கவனம் செலுத்தும் மேஸ்திரியின் செயலுக்கு இணையானதாகும். இது நல்லதல்ல.

    அரசுப் பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகுழுவையாகவும், காற்றடித்தால் மேற்கூரை பறந்து செல்லுபவையாகவும் இருப்பதால் அதில் பயணம் செய்யவே மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டவிரோத கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதிலிருந்து விலக்கியே வைக்கும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் பேருந்துக் கட்டணங்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களில் 30 விழுக்காட்டினர் வேறு வகையான போக்குவரத்துகளுக்கு மாறினர் என்பது அரசுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும். இதை உணர்ந்து, கடந்த காலங்களில் விலகிச் சென்ற பயணிகளை மீண்டும் அரசுப் பேருந்துகளுக்கு அழைத்து வருவது மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலிமைப்படுத்தும்; மாறாக, சட்டவிரோத கட்டண உயர்வுகள் அவற்றை சிதைத்து விடும்.

    எனவே, அரசுப் பேருந்துகளின் வகைப்பாட்டை மாற்றி உயர்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பேருந்துகளில் காணப்படும் குறைகளை களைந்து, மக்கள் ஆதரவை மீண்டும் பெற்று போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss
    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்களில் அதிகளவு கட்டணத்தை வசூலித்ததை கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி உள்ள நாட்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு சிறப்பு பஸ்களிலும் வேகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    பண்டிகை கால பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் தங்களது கட்டணத்தை 2 மடங்கு உயர்த்திவிட்டன. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.1650 முதல் 2250 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

    படுக்கை வசதி இல்லா பஸ்களில் ரூ.1300 முதல் ரூ.1490 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரங்களை தனியார் ஆம்னி பஸ்கள் ‘ஆன்-லைனில்’ வெளிப்படையாகவே வெளியிட்டு உள்ளது.

    இதேபோல் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அரசு பஸ்களை விட குறிப்பிட்ட நேரத்துக்குள் சொகுசான பயணம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை பொதுமக்கள் நாடிச்செல்லும் நிலை உள்ளது.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். எனினும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கட்டண கொள்ளையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆயுதபூஜை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.

    விடுமுறை முடிந்து இவர்கள் நேற்று ஊர் திரும்பினார்கள். இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    வழக்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இருக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படும். படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் ரூ.1500 கட்டணம் ஆகும். சில ஆம்னி பஸ்களில் நேற்று இந்த கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.3000-ம் வரை வசூல் செய்யப்பட்டது.

    இந்த கட்டண கொள்ளையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டண கொள்ளையை கண்டித்து குமரி மாவட்ட ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் இடையில் உள்ள ஊர்களுக்கு பயணிகளை ஏற்றாமல் பல பஸ்கள் சென்றதால் பஸ் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    ×