என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toll plaza"

    • தீபாவளியுடன் போனஸ் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

    இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டனர். கேட்டை மூடினால், வாகனம் அதன்முன் வந்து நிற்கும். fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் கேட் திறக்கப்படும்.

    போனஸ் வழங்காத கோபத்தில் ஊழியர்கள் கேட்டை திறந்து விட்டனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காலை வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல சென்றது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஸ்ரீசாய் அண்டு தத்தார் நிறுவனத்திற்கான ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார். நிறுவனம் தீபாவளியுடன் போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களுக்கு வங்கி கணக்கில் போனஸ் வரவு வைக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    மற்றொரு ஊழியர் "கடந்த ஒருவருடமாக நான் இங்கே வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தவிதமான போனஸும் தரவில்லை. நாங்கள் கடுமையான வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், சம்பளம் கூட சரியான நேரத்தில் தரப்படுவதில்லை. நாங்கள் ஊழியர்களை மாற்றிவிடுவோம் என நிறுவனம் தெரவிக்கிறது. ஆனால், எந்த போனஸும் கொடுக்கப்படவில்லை" என தனது கவலையை தெரிவித்தார்.

    • தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன.
    • 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

    சுங்கச்சாவடி கட்டணம் என்பது, நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்ணயிக்கும் இந்த கட்டணங்கள், ஆண்டுதோறும் வாகனங்களின் வகையைப் பொறுத்து உயர்த்தப்படுகின்றன.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

    சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டில் இன்று முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

    * கார், வேன், ஜீப்பிற்கு மாற்றமின்றி ரூ.75 ஆக தொடரும்.

    * கார், வேன், ஜீப்பிற்கு ரிட்டர்ன் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ. 110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    * பேருந்து, லாரிகளுக்கான கட்டணம் ரூ.255-லிருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது.
    • சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன.

    சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992-ம்ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்தநிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண விவரம்:-

    கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105, பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), லாரி, பஸ் ஒரு வழி கட்டணம் ரூ.370 (ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555 (ரூ.540), பல அச்சு வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425). இவ்வாறு ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    சுங்க கட்டணம் எவ்வளவு உயர்வு?

    மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணத்தில் இருந்து ஒரு முறை, இருமுறை பயணத்திற்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.65 கூடுதல் வசூலிக்கப்படுகிறது.

    இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருமுறை பயணத்திற்கு ரூ.5, மாதாந்திர கட்டணம் ரூ.105 கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது. லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.10 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.215 வசூலிக்கப்பட உள்ளது.

    இரண்டு அச்சு, மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.20 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.345 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 

    • கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கசாவடிகளுக்கும் கட்டண வசூலிக்க நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு முறையான ஆணை வரவில்லை எனக் கூறி தொடர்ந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை நேற்றைய தினம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. கட்டண வசூலுக்கு தடை வித்த ஆணை கிடைக்கப்பெற்றதால் நள்ளிரவு முதல் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.

    நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.

    நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.

    • நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வழக்கமான கட்டணத்தில் பாதி அளவு வசூலிக்கப்பட்டதால் யாரும் வாய் திறக்கவில்லை.
    • சுமார் ஒன்றரை ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்துள்ளது.

    விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வகசியாக சுங்கச்சவாடி உள்ளது.

    இந்த வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை போலி சுங்கச்சாவடியாக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி போன்று போலியான சுங்கச்சாவடி அமைத்தனர். மேலும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த சாலை வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

    வகசியா சுங்கச்சவாடியில் வசூல் செய்யும் பணத்தை விட 50 சதவீதம் குறைவாக வசூலித்துள்ளனர். இதனால் வாகனம் ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. தங்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைப்பதால் அந்த வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி சுங்கச்சாவடி செயல்பட்டு வந்துள்ளது. லட்சக்கணக்கானோரிடம் சுமார் 75 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 110 ரூபாய் முதல் 595 ரூபாய் வரையிலான வரி வசூலுக்கு 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி செயல்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான அமர்ஷி பட்டேல், அவருடைய கூட்டாளிகள் வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவ்ராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட பலமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆறு போலி அலுவலகங்களை நடத்தி வந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
    • கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுமுதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

    அதன்படி மணகதி, கல்லக்குடி, வல்லம், தென்மாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடியில் கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன.
    • நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

    புதுடெல்லி:

    புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    'சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

    • கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமையில் நடைபெற்றது. கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், பெருமாள்மலை முதல்அடுக்கம் பிரிவு வரை உள்ள பிரதான சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும், மேலும் அந்தப் பகுதி சாலையோரங்களில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வனத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இங்குள்ள கிராம பகுதியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவிகளின் சிரமத்தை போக்க மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தி இப்பகுதியில் உள்ள பள்ளிகளை இன்னும் தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

    இதுபோல் ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி சுரேஷ் பேசுகையில், தங்கள் பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளது. குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுவதில்லை. குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை அருகிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

    வில்பட்டி பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தங்கள் பகுதிகளில் மக்காத குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தெருப்பகுதிகளில் உள்ள சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். வில்பட்டியில் இருந்து கோவில்பட்டி வரை செல்லும் சாலையையும் சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்றார்.

    மேல் மலைப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் பேசுகையில், 2 பஞ்சாயத்துகளுக்கு ஒரு டிராக்டர் வீதம் அமைத்து குப்பைகளை அகற்ற பயன்படுத்துவதற்கும், கிராம பகுதியில் முக்கியமாக தெரு விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரிகா மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் தெரு விளக்கு, குடிநீர்வசதி, சுகாதாரம் அனைத்தையும் மேம்படுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    பேத்துப்பாறை ஆதி மனிதன் குகை, ஐந்தருவி செல்லும் பகுதி, பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் கோவில் காட்சி முனைகள் செல்லும் பகுதி, மன்னவனூர்சூழல் சுற்றுலா பூங்கா, ஏரிப் பகுதிக்குச் செல்லும் வழிகள், கூக்கால் ஏரி, நீர்வீழ்ச்சி காட்சி முனைகள் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கட்டண சுங்கச்சாவடி கட்டமைப்பு அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். அந்த தொகை அதன் தொடர்புடைய கிராம ஊராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பயன்படுத்தப்படும் என்றனர். இது மன்றத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டது.

    ×