என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
- கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கசாவடிகளுக்கும் கட்டண வசூலிக்க நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு முறையான ஆணை வரவில்லை எனக் கூறி தொடர்ந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை நேற்றைய தினம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. கட்டண வசூலுக்கு தடை வித்த ஆணை கிடைக்கப்பெற்றதால் நள்ளிரவு முதல் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






