என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






