search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிமாநில ஆம்னி பஸ்களில் ரூ.1500 வரை கூடுதல் கட்டணம் வசூல்
    X

    வெளிமாநில ஆம்னி பஸ்களில் ரூ.1500 வரை கூடுதல் கட்டணம் வசூல்

    • ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய ஆம்னி பஸ் கட்டணம் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, கேரளா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.1500 வரை கூடுதால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

    மைசூர், எர்ணாகுளத்துக்கு ரூ.3500 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி. இருக்கை மற்றும் படுக்கை உள்ளிட்ட வசதியை பொறுத்து பயணிகளிடம் ரூ.1250 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். விதி முறைகளை மீறி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தால் உடனடியாக இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த கட்டணத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×