search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் திரண்ட பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி.
    X
    நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் திரண்ட பயணிகள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    ஆம்னி பஸ்களில் இருமடங்கு கட்டணம்- நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.2500 வசூல்

    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    Next Story
    ×