search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

    • 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
    • போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கருமத்தம்பட்டி:

    சுங்க கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

    கோவை கருமத்தம்பட்டி அருகே கோவை-அவி்னாசி மெயின் ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க முடியாமல் தவித்தன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.

    கைதானவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×