என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இன்று மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி மாநாடு - உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகிறார்
- தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
- கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.
அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.
அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.
மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.






