என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சி தெப்பக்குளத்தில் பேன்சி கடை உரிமையாளரின் வாகனம் திருட்டு போனது
- கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி,
திருச்சி மேலசிந்தாமணி கரூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (வயது 38). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தெப்பக்குளம் தேவாலயம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பின்னர் நூர் முகமது இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வசந்த உற்சவம் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
- வசந்த உற்சவ நாட்களில் தாயார் மூலவர் சேவை கிடையாது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம், நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் ரெங்கநாச்சியார் எழுந்தருளுவார்.
இந்த ஆண்டுக்கான தாயார் வசந்த உற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைவார்.
வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேருவார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.
பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இதில் எட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இருந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.
ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப்பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
- குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.
திருச்சி:
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க. அரசின் நடவடிக்கையால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிகள் அதிகரித்துள்ளது. காவிரி பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உழவுக்குத் தேவையான இடுபொருள், கடன் உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. நடப்பாண்டும் குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவை அதிகரிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4,703 கிலோமீட்டர் தூரம் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.
உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம்
மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தெரிவித்தார்.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
- 3 கிலோ 973 கிராம் தங்கமும் கிடைத்தது
மண்ணச்சநல்லூர்:
சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 பணம், 3 கிலோ 973 கிராம் தங்க நகைகள், 7 கிலோ 645 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.
- இரவு 8 மணிக்கு திருவிழா விருந்து நடைபெறுகிறது.
- தினமும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
திருச்சி,
திருச்சி உள் அரியமங்கலத்தில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் இரவு 8 மணிக்கு திருவிழா விருந்து நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தினமும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 17-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் 18-ந் தேதி திருப்பலி மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் மற்றும் இறை இசை பாடல் குழுவினர், அனைத்து அன்பியங்கள், ஆண்டனி பாய்ஸ், விருதுகள் நற்பணி மன்றம், வெள்ளாமை இயக்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், மகளிர் சுய உதவி குழுவினர், கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
- திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
திருச்சி:
திருச்சி சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 23).இவர் சிந்தாமணி வென்னிஸ் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 1250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
- அரியமங்கலத்தில் பிளஸ்-1 மாணவி மாயமானார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ஒய்யண்ணன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (வயது 17). இவர் தேனி மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே உள்ள ஆடிப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று தந்தை வீட்டிற்கு வந்த அகிலாண்டேஸ்வரி திடீரென்று மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை ஒய்யண்ணன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அகிலாண்டஸ்வரியை தேடி வருகின்றனர்.
- துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டிபன் கடை எரிந்து நாசமானது
- சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடவாள பொருட்களும் எரிந்து சாம்பலானது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சரவணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு கடையின் உள்ளே புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சண்முகப்ரியன், பழனிச்சாமி, வினோத், சஷிர் உள்ளிட்டோர் அடங்கிய தீயணைப்பு குழுவினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையின் மேற்கூரை மற்றும் கடையின் உள்ளே இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடவாள பொருட்களும் எரிந்து சாம்பலானது.
- தஞ்சாவூரிலிருந்து நாளை காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி:
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவேண்டும் என்பதற்காக இந்த பணிகள் வேகமெடுத்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் பணிகள் மும்முரமாக நடக்கிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (9-ந்தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து காரில் தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சங்கம் ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
தஞ்சாவூரிலிருந்து நாளை காலை புறப்பட்டு வல்லம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி ஆற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து பூண்டி வழியாக திருச்சி மாவட்ட எல்லையா செங்கரையூர் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு தி.மு.க.வினர் முதலமைச்சரை வரவவேற்கிறார்கள்.
இதையடுத்து திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்து புள்ளம்பாடியில் கூழையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் நத்தம், வெங்கடாசலபுரம் வழியாக இருதயபுரத்தில் நந்தியாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
பின்னர் சமயபுரம், கொள்ளிடம் வழியாக திருச்சியை வந்தடைகிறார். அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முன்னதாக விமான நிலையத்தில் தூர்வாரும் பணிகள் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் முதல்வர் பயணம் செய்யும் வழிகளிலும், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் பகுதிகளிலும் டிரோன்கள் பறக்க இன்றும், நாளையும் தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.