என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seeman"

    • திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
    • மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.

    திருச்சி:

    தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது. இதில் வழக்கம்போல் தனித்த அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார். ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

    நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்தனர்.

    பின்னர் அவர்கள் தலைவர்களின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு சரியாக மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான மேடை 200 அடி நீளம், 64 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள், தமிழுக்காக போராடியர்கள் என மொத்தம் 570 தலைவர்களின் பதாகைகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன.

    வாகனங்கள் நிறுத்த 47 ஏக்கரில் பிரமாண்ட பார்க்கிங் வசதி, 38 மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியாக அமர இருக்கைகளுடன் கேபின்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அமர தனி கேபின், வெளிநாட்டவர்கள் அமர தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.

    ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் பறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் அவரது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரை ஆற்றுகிறார். அப்போது பிரம்மாண்ட மேடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

    இந்த தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கும் தகவலையும் வெளியிடுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 சதவீத வாக்குகளை காரைக்குடி அவருக்கு பெற்றுத்தந்தது. ஆகவே இந்த முறை காரைக்குடியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என அவர் திட்டமிட்டு அங்கு களம் காண்கிறார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து தனக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காண்பித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் அடுத்த பாய்ச்சலாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு அமையும் என்பதில் சீமான் உறுதியாக உள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார்.

    • நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.
    • திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பொங்கலுக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசு ரூ.3 ஆயிரம் அறிவித்திருக்கிறது.

    இதன் மூலம் இந்த பொங்கல் மக்கள் பொங்கலாக இல்லாமல் அரசியல் பொங்கலாக மாறி இருக்கிறது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் மக்கள் அரசியலாகும்.

    சட்டமன்ற தேர்தலில் பணபலத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கமும் மக்கள் பலம் உள்ளவர்கள் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.

    இந்த தேர்தலில் நிச்சயம் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

    ஜனநாயகன் படத்தை போன்று இதற்கு முன்னர் எனது படங்கள் உட்பட பல படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே அதனைப் பற்றி இப்போது பெரிதாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

    அதைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன அதையெல்லாம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராட்டம், நர்சுகள் போராட்டம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜனநாயகன் பட விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.

    பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ரூ. 6,800 கோடியை செலவிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் 4½ ஆண்டுகளில் 4 லட்சம் கோடியையும் கடன் வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

    இந்த தேர்தல் திராவிடருக்கும் தமிழருக்கும் ஆன தேர்தலாக இருக்கும். திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதனை நிச்சயம் செய்து காட்டுவோம் என்றார். 

    • பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
    • திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பேரன்பிற்குரிய உறவுகளுக்கு..!

    வணக்கம்.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும்.

    மதநல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடித்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும்.

    குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோவிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும்.

    பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!

    'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்?

    இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்?

    மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது. மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும்.

    உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! 'உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு' என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும்.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம் அறிவுரை கூற எண்ணி மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்;

    நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான் அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை, சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும். எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது.

    இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது.

    ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துகொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!

    திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள்

    அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை

    ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்!

    தமிழர் நிலம் எந்த காலத்திலும்

    மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை

    உலகிற்கு உணர்த்துவோம்!!!

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார். 



    • கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
    • அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    மதுரை:

    மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது ஆதாரமில்லாத, அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

    சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.

    பாலியல் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.

    இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.

    கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.

    இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×