என் மலர்
நீங்கள் தேடியது "தேமுதிக"
- பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
- விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.
இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.
இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.
ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.
இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.
எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார்.
- 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேமுதிகவின் மாநாடு நடைபெற்றது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது உட்பட மாநாட்டில் 11 தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ்,
"கடலூர் என்றாலே கேப்டனின் கோட்டை. ராசியான மாவட்டம் கடலூர். 2011-ல் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக வெற்றிப் பெற்ற மாவட்டம். 2011-ல் 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் சென்றார். மீண்டும் அதேபோல தேதிமுக வெற்றிப்பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக வேண்டும் என்பது எனது ஆசை. 10 லட்சம் தொண்டர்கள் இன்று மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அதனால் தேமுதிக சீட்டு எண்ணிக்கையில் பேரம் பேசுவதில் தவறில்லை. தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.
- விஜய் அண்ணாவிற்கு தம்பியாக ஒரு அட்வைஸ்.
- காங்கிரஸ், கூட்டணிக்காக ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற பெயரில் பெரும்மாநாட்டை தேமுதிக நடத்திவருகிறது. இந்த மாநாட்டில் பத்து தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்.
இதனிடையே மாநாட்டில் விஜய பிரபாகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"விஜயகாந்த் மண்ணிற்கு சென்றாலும், பல லட்சம் தொண்டர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். நமது வாழ்வின் ஒளியாக இருக்கிறார். நிச்சயமாக நமக்கான காலம் உள்ளது. கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றுப்பட்டு செயல்படவேண்டும். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேமுதிகவின் சேவை, தேவை வேண்டும்.
தேமுதிகவிற்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்படுகிறதோ அதுதான் உங்களை ஆட்சியில் அமரவைக்கும். தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறுகிறதோ அதுதான் மெகா கூட்டணி. அதுதான் வலிமையான கூட்டணி. உண்மையை உரக்கச்சொல்ல தேமுதிக தொண்டனால்தான் முடியும். ஜனநாயகன் பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. விஜய் அண்ணாவிற்கு தம்பியாக ஒரு அட்வைஸ்.
இன்று காங்கிரஸ், கூட்டணிக்காக உங்கள் படத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். நம்பிவிடாதீர்கள். அது மீனுக்கு தூண்டில்போடுவதுபோல; மாட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நன்றாக வரவேண்டும். அவர்கள் விருதுநகரில் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நம்பிவிடாதீர்கள். இது என்னுடைய சிறிய அட்வைஸ். விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்." என தெரிவித்தார்.
- அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், விஜயகாந்திற்கு அவர்களுக்கு “மணிமண்டபம்” அமைத்துத் தரவேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற பெயரில் பெரும்மாநாட்டை நடத்திவருகிறது. இந்த மாநாட்டில் தேமுதிக 10 தீர்மானங்கள் போட்டுள்ளது.
- 2026 ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, மக்களின் நலன், மற்றும் எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இருக்க வேண்டும்.
- சட்டம், ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வகையான போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் அதற்கு துணைபுரிவோருக்கு எதிராக கடுமையான தண்டனை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்களின் பணிகளை நிரந்தரப்படுத்தி, சம ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கி, எதிர்காலத்தில் எந்தவிதப் போராட்டங்களுக்கும் இடமளிக்காத வகையில் நிரந்தரமான தீர்வுகளை அரசு உருவாக்க வேண்டும்.
- சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் செயல்கள் சனாதனத்திற்கும், சமூக அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கருத்துக்களை கடுமையாகத் தடுக்கவும், மதரீதியான மோதல்களை உருவாக்குவோர் மீது காவல்துறை பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்கள் திருத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
- பொங்கல் பரிசுத்தொகுப்புகள் எந்த விதமான பாகுபாடும் இன்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாகவும், முழுமையாகவும் சென்றடைய வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் டேப் ஆகியவை அனைவருக்கும் முறையாக சென்றடைய வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, விவசாயிகளுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் அரசு இருக்க வேண்டும். விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கு உரிய நியாயமான விலையை தமிழக அரசே நிர்ணயித்து, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகளை பாதுகாக்க, போதிய கிடங்குகளை அமைக்க வேண்டும்
- விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும்
- தமிழக அரசு, அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில், விஜயகாந்திற்கு "மணிமண்டபம்" அமைத்துத் தரவேண்டும்.
- மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர், கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், விஜயகாந்த் பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரதநாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி நடக்கிறது.இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாநாடு தொடங்கி நடக்கிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அப்போது அவர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டசபை தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடக்கும், இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநாட்டு திடலில் மேடை அமைக்கும் பணி, சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்த நிலையில் மேடை அமைக்கும் பணியை நேற்று கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பார்வையிட்டார்.
அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.
- ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிச்சியமாக வரும் 2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்று பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றிப்பெறும்.அனைவருக்கும் இந்த முறை அமைச்சரவையில் அங்கம் வகிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அதாவது ஆட்சியில் பங்கு என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு சாத்தியமும் நிறைய இருக்கிறது.
கூட்டணியக்கு யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணிகள் அமையும்போது மக்களுக்கு தெளிவாக புரியும்.
யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்குதான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாறு உண்டு. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சிகள், காட்சிகள் மாறுகிறது. ஆனால் அதிமுக மட்டும்தான் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தது.
அதனால், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.
"தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 5ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட அளவில் தொண்டர்களிடம் கொண்டு செல்வது என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு என்ற பெயருடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
* போதை கலாச்சாரத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களால் சென்னை ஸ்தம்பித்துள்ளது.
* தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி முடியும் நிலையிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
* அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மக்களுக்கு நல்லது நடந்தால் தே.மு.தி.க. வரவேற்கும்.
* கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
* தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- "வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் தே.மு.தி.க. தலைவர்.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், "பத்ம பூஷன்" அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, சென்னை, தேமுதிக அலுவலகத்தில் உள்ள "கேப்டன் ஆலயம்" நினைவிடத்தில் நடைபெற்ற 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன்.
கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர்.
- தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்
ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- NDA-வில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது.
- தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், தமிழக பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் கடந்த வாரம் சென்னை வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது கூட்டணிக்கு வரவுள்ள புதிய கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், பாமகவிற்கு 23 தொகுதிகளும், தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் என தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை அதிமுக மற்றும் பாஜக மறுத்தது. தவறான தகவல் என விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பாக நடைபெற்ற விழாவில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பியூஸ் கோயல் இபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்ததாவது:-
அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதிமுக- பாஜக இரண்டும்தான் தற்போது கூட்டணியாக உள்ளனர். அன்றைய கூட்டத்திற்கு பிறகு இந்தந்த கட்சிக்கு இத்தனை சீட்டு என்று அதிகாரப்பூர்வமாக யார் வந்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார்கள்.
அதிகாரப்பூர்வமாக அந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அதன் பின்னர் பதில் சொல்கிறேன். சமூக வலைதள மூலமாக அன்று வெளியான அந்த ஒரு செய்தியை வைத்துக்கொண்டு அன்று முழுவதும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
ஜனவரி 9 மாநாடு அன்று யாருடன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன். நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவு எடுப்போம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.






