என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிவகங்கை
- நள்ளிரவில் திடீரென கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
- யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப் பெற்ற இந்த கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை மண்டலம் சிவகங்கை வனக்கோட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.
இதன் அடிவாரத்தில் கோவில் யானை தங்குவதற்காக தகரத்தினாலான கொட்டகை போடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் கூரையும் வேயப்பட்டு இருந்தது.
இந்த கோவிலில் வளர்ப்பு யானை சுப்பு என்ற சுப்புலட்சுமி பெண் (வயது 54) கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.
இதில் யானையின் மீது எரிந்த கூரை விழுந்து தீக்காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் குன்றக்குடி உதவி கால்நடை மருத்துவர் சிரஞ்சீவி மற்றும் மதுரை, தேனி, நாமக்கல், ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக்கு ழுவினர் நேரில் சென்று தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
30 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த யானை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிகுந்த அன்பைப் பெற்றதாக திகழ்ந்தது.
உயிரிழந்த யானைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட வன அலுவலர் பிரபா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் யானையின் உடலுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீருடன் வழிபட்டனர்.
யானை மறைவையொட்டி குன்றக்குடி கோவிலில் இன்று மணி அடிக்காமல் பூஜை நடத்தப்பட்டது. மேலும் குன்றக்குடி வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
- ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது.
- பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது.
திருப்புவனம்:
மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது.
பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
- ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிவகங்கை:
சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
- மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், திருப்புவனம் அருகே உள்ள தட்டான் குளம் கிராமத்தில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர்.
பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது? என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
இதனால், 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.
- தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வரும் 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 வட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை உள்ளிட்ட 4 வட்டங்களில் 11-ந்தேதி விடுமுறைக்கு மாற்றாக 21-ந்தேதி கல்வி நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருங்குளம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 184 மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.
மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர வசதியாக முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27 லட்சத்தில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கிக்கொடுத்தனர். இந்த பஸ் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.
இதுதொடர்பாக கலெக்டர் கூறும்போது, "மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான டீசல் செலவு, டிரைவர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை டாக்டர் முருகேசன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அவரது சேவையை பாராட்டுகிறேன்," என்றார்.
- நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
- உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் வாங்கிச் சென்ற இட்லி பார்சல் வாங்கி சென்றனார். பின்னர் அவர் மருத்துவமனைக்குள் சென்று நோயாளிக்கு கொடுப்பதற்காக பார்சலை பிரித்து பிளாஸ்டிக் கவரில் இருந்த சாம்பாரை ஊற்றினார்.
அப்போது அந்த சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பிடவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் நோயாளியின் உறவினர் ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்ததாக சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்து செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைத்திருந்த காலாவதியான பூரி, புரோட்டா, கோழிக்கறி, சமையல் மசாலா பொருட்கள், அழுகிப்போன காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அரசு மருத்துவமனைக்கு எதிரிலேயே சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகத்தின் சமையலறையை ஐந்து நாட்களில் சுத்தப்படுத்தி சரி செய்யவும், அதுவரை உணவகத்தை மூடவும் உத்தரவிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபதாரமும் விதித்தனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொள்வதை அதிகாரிகள் புகார்கள் வந்த பிறகே மேற்கொள்வதாகவும், அதுவரை எந்தவொரு உணவகத்தையும் கண்டுகொள்ளவதில்லை என்றும் கூறுகிறார்கள்
சாலையோர உணவகங்களில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்துவதை காட்டிலும் மருத்துவமனை, மக்கள் அதிகம் செல்லும் ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு நடத்துவதோடு, சமையல் அறை, தயார் செய்யப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவற்றையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே வார்த்தை போர் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைவர்களின் கருத்து மோதல் அதனை பொய்யாக்கியது.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திதோடு மோதல் போக்கையும் அதிகரிக்க செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தது தொடர்பாகவும் சர்ச்சைக் குரிய கருத்துகளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் மீண்டும் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தநிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க. பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
- ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
காரைக்குடி:
மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.
அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.
அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.
தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.
ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.
உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள்.
- காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைத்தள வாசிகளின் சேட்டை சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் தொல்லை கொடுப்பதாக மாறுவதும் உண்டு.
ஆனால் ஒரு உண்மையை பொய்யாக்கி திசை திருப்பும் மோசமான செயல்களில் ஈடுபடுவதுதான் சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
கடந்த 2 நாட்களாக சிவகங்கை பகுதியில் ஒருவரை குரங்கு கடித்ததால் அவர் குரங்கு போலவே மாறி விட்டார். குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு கிரில் கதவுகளில் தாவுகிறார். அருகே செல்பவர்களை பார்த்து உருமுகிறார் என்றெல்லாம் வீடியோ பதிவுடன் பரப்புகிறார்கள். அதை யார் பார்த்தாலும் நம்பத்தான் செய்வார்கள்.
ஆனால் உண்மை அது வல்ல. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது.
காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநல சிகிச்சை பெற்று வரும் இவர் காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நோய் முற்றிய நிலையில் அவரை காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு டாக்டர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்த சரவணன் அங்கிருந்த கிரில் கதவில் தாவி குதித்து ஏறியிருக்கிறார். அருகில் நெருங்கியவர்களை விரட்டியிருக்கிறார்.
இதனால் நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள். பின்னர் பாதுகாவலர்கள் சூழ்ந்து அவரை பிடித்து கைகளை பின்னால் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவர் சமூக வலைதளத்தளங்களில் திசை திருப்பி விட்டிருக்கிறார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள்.
இப்போது நெட்டிசன்கள் பலர் அடப்பாவிகளா? இப்படியெல்லாமா பண்வீங்க? என்று பதிலுக்கு பதிவிட்டு வறுத்து எடுக்கிறாார்கள்.
- உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
- கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.
மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
"ஐயா.. முனியய்யா சாமி உதயநிதி துணை முதல்வர் ஆகணும்" திமுக கவுன்சிலர் செய்த செயல் pic.twitter.com/CiULT3OpSK
— Thanthi TV (@ThanthiTV) August 16, 2024
- என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
- சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம். வேறு என்ன செய்ய முடியும்? அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தலித்துகள் முதலமைச்சராக முடியாது எனக் கூறிய திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்.
விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது சர்வாதிகாரம் என்று கூடச் சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல். கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கல்" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்