என் மலர்
நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரி"
- சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
- எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
திருப்பதி:
மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். நிறைய ரத்த தானம் செய்ய வேண்டும். வரிசையில் காத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு நிறைய நேரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்குகின்றன.
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தி சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய ஒரு சுகாதார எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கிங்கோத்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் மலக்பேட்டை பகுதி மருத்துவமனை ஆகியவற்றில் ஒரு முன்னோடி திட்டமாக இந்த எந்திரம் மாநில அரசு அமைத்துள்ளது
எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, லிப்பிட் ஹீமோகுளோபின், நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க வேண்டும். காது, தொண்டை மற்றும் மூக்கு பாகங்களை பரிசோதிக்கலாம். கண் பரிசோதனைகள் செய்யலாம்.
இது வெற்றி பெற்றால், மேலும் பல அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
- மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
- மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் பகல் 12.45 மணிக்கு வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
- மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ரெயில் மூலம் காட்பாடி வந்தார்.
அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன். எஸ்.எம். நாசர், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம். எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
- சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.
அங்கு கடந்த 20-ந்தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார்.
20-ந்தேதி இரவு, 15 வயது சிறுமி, ஆஸ்பத்திரி கழிவறைக்கு சென்றாள். அப்போது, வாலிபர் ரோஹித்தும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தார். கழிவறையில் வைத்து சிறுமியை கற்பழித்தார். எதிர்ப்பு தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, அவர் இந்த பாதக செயலை செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
நேற்று முன்தினம் மாலை, தன் தாயாரிடம் இந்த கொடூரத்தை தெரிவித்தாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வாலிபர் ரோஹித்தை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது.
- ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பழவேற்காடு ஏரி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தரைதளம் ஆங்காங்கே இடிந்தும் அடிக்கடி விஷ பூச்சிகள் உள்ளே செல்வதால் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் காவலாளிகள் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் இருந்து பாம்புகள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து விடுகின்றன என்றனர்.
- ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.
தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
- டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்பட 35க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கணினி வழியாக பதிவு சீட்டு வழங்கப்படுகின்றன. இந்த சீட்டை பெற்றுச் செல்லும் நோயாளிகள் டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்வதற்காக வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோனோர் முக கவசமும் அணிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக டாக்டர் அறைக்குள் வரும் சூழல் ஏற்பட்டது.
இதனை தடுக்கும் பொருட்டு டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோயாளிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் டோக்கன் எண் கூறும்போது அந்த நோயாளி மட்டும் டாக்டரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.
- அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.
கோவை,
கோவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பன்னடக்கு கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து 6 தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும். தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது.அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் அமைக்கப்படும்.
அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி, சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம்.
நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக, நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம். அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.
அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை செய்து திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்.
அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவர் அவர் கூறினார்.
பின்னர் வாலாங்குளம் புறவழிச்சாலையில் மரம் நட்டு வைத்து , உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வடகோவை -மருதமலை சாலையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
- மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
கோவை,
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார சீா்திருத்த திட்டம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் சாா்பில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தரவரிசைப் படுத்தப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பா்) சிறப்பாக செயல்பட்ட ஆஸ்பத்திரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி 3-ம் இடம் பிடித்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆய்வில், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, எம்.ஆா்.ஐ., இருதய பிரிவு, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சை, பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விபத்து சிகிச்சை, நோயாளிகள் கவனிப்பு, டாக்டர்கள் - நோயாளிகளின் எண்ணிக்கை, நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட 39 விதமான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையான மாதங்களில் தினசரி சராசரியாக 3,204 போ் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனா். தவிர, உள்நோயாளிகள் பிரிவில் 1,353 போ் சிகிச்சைப் பெறுகின்றனா். 238 டாக்டர்கள் உள்ளனா்.
மேலும், 936 சிக்கலான அறுவை சிகிச்சைகள், 1,175 மகப்பேறு சிகிச்சைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அரசு ஆஸ்பத்திரியில் தாய் - சேய் உயிரிழப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குள் சென்றார்.
- நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்குள் சென்றார்.
அங்கு இரவு பணியில் மருத்துவர்கள் உள்ளனரா? அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுப்பிரிவு, பேறுகால பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என மருத்துவமனையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளை சந்தித்து உரிய முறையில் சிகிச்சை கிடைக்கிறதா? மருத்துவர்கள் எப்படி கவனித்து கொள்கின்றனர் என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு அறிக்கைகளை ஒப்பிட்டு சரிபார்த்த நிலையில் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? எனவும் ஆட்சியர் சமீரன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
சீனாவில் இருந்து மலேசியா வழியாக கோவைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரானோ கன்டறியப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உஷார் படுத்தப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்க இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.
- புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும்.
- தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் விவரம் வெளியிடப்படவில்லை.
சென்னை :
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 90 குழந்தைகள் பிறந்துள்ளன.
அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 25 குழந்தைகளும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் 19 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இதேபோல் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 28 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 18 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் விவரம் வெளியிடப்படவில்லை.
குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், புத்தாண்டு பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது.
- தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (வயது 29). பட்டதாரியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 12-ந் தேதி சத்யாவின் தந்தை உள்பட சிலர், அரசு மருத்துவமனை டாக்டரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார். மேலும் டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்களை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 12-ந் தேதி சத்யா கண் பார்வை இழந்து விட்டதாக டாக்டர்களே உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சத்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சத்யாவின் கண்ணை அகற்றியும் விட்டனர்.
இதனால் ஆவேசமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த டாக்டரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அனுமதிக்காததால் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






