என் மலர்
நீங்கள் தேடியது "surgery"
- இந்த பசை 'Bone-02' என அழைக்கப்படுகிறது.
- 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது கம்சட்கா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் அதிர்ந்த போதிலும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனை கட்டடம் குலுங்கியது. அப்போது மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள ஸ்ட்ரெச்சரை இறுக்கமாகப் பிடித்தனர்.
மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், நோயாளி குணமடைந்து வருவதாகவும் ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களை பெற்றுள்ளார்.
- மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றினார்.
நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை நீல் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது கண்டறியப்பட்டது. அவற்றின் அடிப்படையில், அவர் மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.
- 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
- ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.
இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.
கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
- மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் பகல் 12.45 மணிக்கு வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
- அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
34 வயதான சூர்யகுமார் யாதவ் லண்டனில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு தான் நலமுடன் உள்ளதாக சூர்ய குமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மாத காலத்திற்கு டி20 கிரிக்கெட் இல்லாததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் 3 மாத காலம் ஓய்வெடுக்க உள்ளார்.
- மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
- விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.
கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,
"இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.
இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.
கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.
வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
- முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).
இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.
இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
- குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும்.
- குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை ரதம் .
திருப்பூர் :
மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்ட குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நகர்வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் விளக்க கையேடு, முகாம் நடைபெறும் தேதிகள் அடங்கிய கைபிரதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (குடும்பநலம்) கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
- அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.
அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
- ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
- மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.
கடலூர்:
திட்டக்குடி அரசு தலைமை மருத்துவஅலுவலர் டாக்டர் சேபானந்தம் மேற்பார்வையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய்ள கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது58), இவர் பைக்கிலிருந்து தானகவே தவறி விழுந்து வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்ததை கணினி உதவியுடன் இயங்கும் ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
திட்டக்குடி அரசு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் கிருத்திகா, அறுவை அரங்கு செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.






