என் மலர்
பிரிட்டன்
- ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
- இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும்.
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் அண்மையில் கொண்டாடினார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் இந்த விருந்து நடைபெற்றது.
இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். விருந்தில் நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டி நடனமாடும் காட்சிகள் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.
- மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
- சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார்.
விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
- ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷிய கப்பல் நுழைந்தது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியில் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தக் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தினோம்.
அப்போது எங்கள் விமானிகள் மீது ரஷிய கப்பல் லேசர்களை செலுத்தியது. ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார்.
- தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.
இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85.
இவர் 2023-ஆம் ஆண்டுதான் இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார். மூத்த சகோதரரான ஸ்ரீசந்த் இந்துஜா 2023-ல் காலமானார்.
இவர்களது தந்தை பரமானந்த் இந்துஜா இந்தியவின் மும்பை மற்றும் ஈரானின் தெஹ்ரான் இடையே வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்து விற்றதன் மூலம் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

இந்துஜா சகோதரர்கள்
தற்போது ஆட்டோமொபைல், பேங்கிங், தொழில்நுட்பம்., ரியல் எஸ்டேட் உட்பட 11 துறைகளில் இக்குழுமம் வர்த்தகம் செய்கிறது.
அசோக் லேலண்ட், இண்டஸ்இண்ட் வங்க, என்.எக்ஸ்.டி டிஜிட்டல் லிமிடெட் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.
கோபிசந்த் இந்துஜா 1997-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார். சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜாவின் குடும்பம் 32.3 பில்லியன் பவுண்டுகளுடன் பிரிட்டனின் பணக்காரக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோபிசந்த் இந்துஜாவுக்கு சுனிதா இந்துஜா என்ற மனைவியும் சஞ்சய் இந்துஜா, தீரஜ் இந்துஜா, ரீட்டா இந்துஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
- விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
- ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது இளைய சகோதரர் ஆண்ட்ரூ உடைய இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை கோட்டையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
லண்டன் மேற்கில் உள்ள விண்ட்ஸர் கோட்டையில் ஆண்ட்ரூ அவர் வசித்து வரும் மாளிகையை காலி செய்ய மன்னர் உத்தரவித்தகக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மரபுப்படி அவரின் இளவரசர் பட்டத்தை பறிப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
பாலியல் வலையமைப்பை உருவாக்கி சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு அனுப்பி வைத்த அமெரிக்க பெரும்புள்ளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
இளமைப் பருவத்தில் இளவரசர் ஆண்ட்ரூவால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அமெரிக்க-ஆஸ்திரேலிய வழக்கறிஞர் விர்ஜீனியா கியுஃப்ரேவின் குற்றச்சாட்டுக்கு மூலம் எப்ஸ்டீன் உடனான ஆண்ட்ரூவின் தொடர்வு அம்பலமானது.
விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு வெளியான அவரது Nobody's Girl என்ற நினைவுக் குறிப்பில், ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த களங்கத்தின் காரணமாகவே மன்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது நீண்ட மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூ உடைய "டியூக் ஆஃப் யார்க்" பட்டத்தை தானாக முன்வந்து ஆண்ட்ரூ துறந்தார். தற்போது, அவரது மற்ற பட்டங்களையும் சார்லஸ் மன்னர் பறித்துள்ளார்.
தற்போது கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மற்றொரு இடத்தில் வசிக்க உள்ளதாக என்று கூறப்படுகிறது.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-பும் முந்தைய காலங்களில் எப்ஸ்டீன் உடன் நெருக்கமாக இருந்ததும் தற்போது சர்ச்சையாவது குறிப்பிடத்தக்கது.
- ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார்.
- எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106-வது ஆவார்.
இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது.
11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.
இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
- யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
- டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
- இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
- இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.
சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது.
- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
- இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்கு வலுவான தனிப்பட்ட உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று கூறினார்.
சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசிய அவர், "மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
- மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
டிரம்ப் விண்ட்சர் கோட்டையில் இருக்கும் அதே நேரத்தில், மத்திய லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன்.
- எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த வேளாண் நல சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை.
எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்கின்றனர். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். அவர்கள் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.
அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை மற்றும் மின் உற்பத்தி மையமும் இருக்கிறது.
நாக்பூரில் உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சிக்காக" என்று தெரிவித்துள்ளார்.
- நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தின் மூலம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு குடிபெயர்ந்த பெற்றோர்க்கு 1980 இல் பிறந்தார் ஷபானா.
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்தார். 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார்.






