search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்டன்"

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

    இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதோடு, இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை.
    • கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.

    இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
    • செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

    "விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

    செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

    "செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

    ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

    பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

    • இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
    • சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

    கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.

    இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

    பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.

    அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார்.
    • வெயின்ரைட்-இன் வங்கி கணக்கை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க வைத்துள்ளது.

    2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இவரது உடல் ஆகஸ்ட் 22, 2020 அன்று தான் கிடைத்தது. ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு டேமியன் ஜான்சன் உயிரிழந்த ஜான் வெயின்ரைட்-இன் வங்கி கணக்குகளை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஷாப்பிங் செய்வது, ரொக்கத்தை எடுத்து செலவிடுவது என்று ஜாலியாக வசித்து வந்துள்ளார்.

    வெயின்ரைட்-இன் வங்கி கார்டு கொண்டு பணம் எடுத்துக் கொள்வது, பொருட்களை வாங்குவது மற்றும் தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்களில் செப்டம்பர் 23, 2018 முதல் மே 7, 2020 வரை டேமியன் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

    • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
    • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

    பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

    பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    லண்டன்:

    பிரான்ஸ் அருகே ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

    • பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
    • ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    லண்டன்:

    பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

    பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார். அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார். ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

    • ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
    • பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

    பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 142 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர். இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உள்ளபோதும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் நிதி மந்திரியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலைவர்கள் லண்டன் வருகை.
    • மன்னர் சார்லஸ் உடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சந்திப்பு.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையொட்டி ராணி உடல் வைக்கப்பட்டிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியேரை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அயர்லாந்து அதிபர் மைக்கேல் டேனியல் ஹிக்கின்ஸ் உள்ளிட்டோர் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். 


    முன்னதாக நேற்று ராணி எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, லான்காஸ்டர் ஹவுஸில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை, திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.

    • 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.
    • கரன்சியில் இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு வெளியிடப்படும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

    புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார். பின்னர் அவர் காரில் பக்கிம்காம் அரண்மனை சென்றார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிம்காம் அரண்மனைக்கு திரும்பி உள்ளார்.

    புதிய மன்னரை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இங்கிலாந்து தேசிய கீதம் பாடி அவருக்கு வரவேற்பு கொடுத்து ராணியின் மறைவுக்கு ஆறுதலும் கூறினார்கள். சார்லசுக்கு சிலர் கைகளில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் அன்பை கண்டு சார்லஸ் நெகிழ்ந்து போனார்.

    இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.

    மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும்.

    அதே சமயம் பழைய கரன்சியும் புழக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணியை குறிக்கும் வகையில் அவள் என்ற வார்த்தை நீக்கப்பட்டு சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.

    சார்லஸ் இதுவரை இந்தியாவுக்கு 15 முறை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×