search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள்"

    • சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.
    • அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.

    3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.

    உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.

    இளைஞர் சாப்பிடும்போது கரப்பான் பூச்சியை விழுங்கி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் சிகிச்சை அளித்ததால்தான் சிக்கலின்றி அவரை காப்பாற்ற முடிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

    • கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம்

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியும் கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் சுகாதார அமைச்சகமான ஸ்வத்ய பவன்[Swathya Bhavan] முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு நேற்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால் ஜுனியர் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தின் கெடுவை புறக்கணித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளாக 12 முதல் 15 பேர் அடங்கிய குழு இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் 25 முதல் 35 பேர் கொண்ட குழுவாக தாங்கள் வருவோம் என்றும் முதல்வர் உடனான சந்திப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் போராடும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகள் கொண்ட புதிய கடிதத்தை மேற்கு வங்க தலைமை செயலருக்கு இமெயில் மூலம் போராடும் மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் இன்றோ நாளையோ நாங்கள் முதல்வர் மம்தாவை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று அந்த இமெயிலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு தரப்பில் இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அப்படி நடந்தால் மம்தா- மருத்துவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • ஜுனியர் மருத்துவர்கள் குழு போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது.
    • அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?' என்ற வசனம் வரும்

    பெண் மருத்துவர் கொலை 

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் வைத்து பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    அரசும் போலீசும் 

    மேற்கு வங்க மம்தா அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் போராடும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக அன்றைய தினம் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவற்றைச் சூறையாடியது. இதைக் கொல்கத்தா போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு போலீசால் கைது செய்யப் பட்டான். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.

    ஜுனியர் மருத்துவர்கள் போராட்டம் 

    இந்நிலையில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த நேற்று முன் தினம் முதல் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இரவு, லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் நேற்றைய தினம் லால்பஜார் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

     

    கமிஷனருடன் சந்திப்பு 

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் சார்பாக ஜுனியர் மருத்துவர்கள் குழு ஒன்று போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது. குற்றம் நடத்த அன்றைய தினம் உங்களின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நீங்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் பின்னர் அவர்கள் தெரிவித்தனர். தான் பதவி விலக வேண்டுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா? 

    இதற்கிடையில் வினீத் கோயலிடம் செயற்கையாக கையால் தயாரிக்கப்பட்ட முதுகுத்தண்டை ஜூனியர் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இது போலீசால் கோழைத்தனமாக இல்லாமல்  முதுகெலும்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டாமுதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?..ரப்பர் துண்டா?' என்று சந்தேகம் வருகிறது  என இடம்பெற்றிருந்த வசனத்தை இது நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வினீத் கோயால் ராஜினாமா செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

    • அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
    • ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.

    மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான அலட்சியம் என்று குற்றம் சாட்டினார்.
    • பழைய சிடி ஸ்கேன் கோப்புறைகளில் இருந்து ஸ்கிராப் டீலர்களுக்கு வழங்கப்பட்டவை.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடிமை அமைப்பால் நடத்தப்படும் கிங் எட்வர்ட் மெமோரியல் (கேஇஎம்) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இதையடுத்து, மருத்துவ ஊழியர்கள் 6 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்த மும்பை முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான அலட்சியம் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையில், பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தலையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து, மருத்துவமனை டீனிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    கேஇஎம் மருத்துவமனையின் டீன் டாக்டர் சங்கீதா ராவத், பிளேட்டுகள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை அல்ல. அது, பழைய சிடி ஸ்கேன் கோப்புறைகளில் இருந்து ஸ்கிராப் டீலர்களுக்கு வழங்கப்பட்டவை என்றார்.

    BMC அறிக்கையின்படி, நோயாளிகள் பொதுவாக தங்கள் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எக்ஸ் ரே அறிக்கைகளை காகித கோப்புறைகளில் பெறுவார்கள்.

    இந்த பழைய கோப்புறைகள் பின்னர் ஸ்கிராப் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.

    ஸ்கிராப் விற்பனையாளருக்கு ஒதுக்கப்பட்ட பணி சரியாக முடிக்கப்படவில்லை என்று குடிமை அமைப்பு சுட்டிக்காட்டியது.

    • கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
    • மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.

    டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.

    ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.

    அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.

    அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.

    விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
    • புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஷாஹாபூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    பெற்றோரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அதிகாரி உறுதியளித்தார். மேலும், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.

    அவர் ஜூன் 15ம் தேதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

    பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என்றனர்.

    மேலும் இதுகுறித்து சஹாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    • தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார்.

    சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது . மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் முஜாஹித் (வயது 20) என்ற வாலிபருக்கு நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

    முன்னதாக முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக அவரை ஓம்பிரகாஷ் என்பவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஜாஹித் தனக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து பேசியபோது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பிருந்தே ஓம் பிரகாஷ் என்னை நிர்வாணமாக படம்பிடித்து தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். நான் வசித்து வந்த குடியிருப்பில் வைத்து என்னை ஓம் பிரகாஷ் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    இந்நிலையில் அவரது சூழ்ச்சியால் தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார். மேலும் எனது தந்தையை கொன்றுவிடுவேன் என்று ஓம் பிரகாஷ் மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
    • கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

    ஒரே நிலையிலான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு சம ஊதியம், சம பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்களாக சேருபவர்களுக்கு, மருத்துவத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.

    அவர்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதனால், பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத கால்நடை உதவி மருத்துவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலையில் பணி ஓய்வு பெற வேண்டியுள்ளது. இது பெரும் அநீதி ஆகும்.

    மருத்துவத்துறை மருத்துவர்களைப் போலவே தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் பணியில் சேர்ந்த 8, 16, 24 ஆகிய ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், சில காரணங்களால் அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் சில திருத்தங்களைச் செய்து செயல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த பரிந்துரையை தமிழக அரசின் நிதித்துறை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

    கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்குவதை தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்கள் நியாயமற்றவை. அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களுக்கு 8, 15, 17 மற்றும் 20-ஆம் ஆண்டுகளில் நான்கு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல.

    தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்புத் துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர்
    • கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும்.

    இதய நோய் கொண்டுள்ள இளம்பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இயல்பாகவே கர்ப்பகாலத்தில் இதயத்துக்கு கூடுதல் பணி அளிக்கப்படுகிறது. அப்போது இதய பிரச்சனைகள் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம். இந்நிலையில் இதய கோளாறு கொண்ட பெண்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். இந்த அபாயங்களை குறைக்க முடியுமா? இதயகோளாறு கொண்டுள்ள பெண்கள் கருத்தரிக்க முடியுமா என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

    சில பெண்கள் பிறக்கும் போதே இதய குறைபாட்டுடன் பிறந்திருப்பார்கள். சிலருக்கு இது குறித்து அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் வரையிலும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகளே இருக்காது. பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் பெண்கள் வளரும் போது இன்னும் சில பிரச்சனைகளை அதிகமாக கொள்ளலாம்.

    இதய நோய் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தால் இதயத்தில் உண்டாகும் கூடுதல் மன அழுத்தம் சிக்கல்களை உண்டு செய்யலாம். கர்ப்பகாலத்தில் இதயம் எப்படி பம்ப் செய்கிறது. சில ஹார்மோன் மாற்றங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களை பாதித்து இதய அபாயத்தை அதிகரிக்கலாம். எனினும் பாதுகாப்பாக பெண் கருத்தரிக்கலாம்.

    அதே நேரம் பெரும்பாலும் பிறக்காத குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் இதய கோளாறு கொண்டிருந்தால் அப்பெண் கருத்தரிக்காமல் இருக்க மருத்துவர் அறிவுறுத்துவார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்ப்பமாகிவிட்டால் கர்ப்பம் முடிந்தவரை ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்க மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    கர்ப்பம் தாயின் இதய நிலைகளை மோசமாக்கலாம். சில நேரங்களில் குழந்தை வளர்வதை பாதிக்கலாம். இதய நோய் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும் போது இவர்கள் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டவர்களாக உள்ளார்கள். மேலும் இவர்கள் இதயவியல் நிபுணர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    லேசாக ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் இதயத்தில் முன்னர் சரிசெய்யப்பட்ட சிறிய துளைகள் போன்றவை கர்ப்பத்தில் சிக்கல்களை உண்டு செய்யாது.

    இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பெருநாடி நோய் போன்றவை சிக்கல்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இத்தகைய ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள் 1% என்பதால் இவர்கள் கருத்தரிக்க அனுமதி அளிப்பதில்லை.

    இதய நோய் இருப்பவர்கள் கருத்தரிக்க விரும்பினால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். இதய நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் எடுப்பவர்கள் இந்த மருந்துகள் கர்ப்பத்துடன் ஒத்துபோகிறதா அல்லது கர்ப்பத்தை பாதிக்குமா என்பது குறித்தும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு இதயம் சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பரிசோதனைகள் எடுத்துகொள்ள வேண்டும். எந்த பரிசோதனையையும் தவிர்க்க கூடாது. அதே போன்று ஆரோக்கியமான பெண்களும் கருத்தரிப்புக்கு முன்பு இதய நோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதய நோயுடன் கருத்தரித்த பிறகு பராமரிப்பு குழுவை தேர்வு செய்யுங்கள். கார்டியோ மற்றும் மகப்பேறியல் குழு மூலம் திட்டமிடுங்கள். கர்ப்பகாலத்தில் உங்களுக்கு தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள், கண்காணிப்புகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

    கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும். இது சில இதய நிலைகள் உள்ளவர்களுக்கு மேலும் ஆபத்தை அளித்துவிடலாம். இந்நிலையில் இரத்த ஓட்டம் மாற்றம் உண்டாகும். பிரசவத்தில் மாற்றம் இருக்கும். சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு ஆறு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை அதிக ஆபத்து காலமாக இருக்கலாம். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அதனால் குழந்தையை பெற்ற பிறகும் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பது அவசியம்.

     நோய் அறிகுறிகள் கர்ப்பத்துக்கு முன்பு பாதிப்பை உண்டு செய்யாவிட்டாலும் கர்ப்பத்துக்கு முன்பு உங்கள் வாழ்க்கையை பாதிக்காவிட்டாலும் கர்ப்பத்துக்கு பின்பு அது பல பிரச்சனைகளை உண்டு செய்துவிடலாம். கர்ப்பகால உடல் மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

    இதய நோய் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதற்கு பின்னரும் உணரும் அறிகுறிகளை மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    உடல் ஆரோக்கியத்தில் திடீர் மாற்றங்கள் இருப்பது, கவலை அறிகுறி, படபடப்பு, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    • சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

    புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

    இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.

    இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்

    இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. 

    ×