என் மலர்
இந்தியா

டெல்லி கார் குண்டு வெடிப்பு: கைதான 4 டாக்டர்களின் பதிவு ரத்து- தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை
- சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.






