என் மலர்
இந்தியா

குஜராத்தில் சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை.. 2352 பேரில் 741 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி
- 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
- ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.
இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.
கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.