என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidney"

    • சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது.
    • சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு, திமுக அரசு என்பது உறுதியாகியிருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய இ.கா.ப. அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்த நிலையில் தான் அதற்கு 4 நாள்கள் முன்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

    மதுரை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.

    மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 இ.கா.ப அதிகாரிகளும் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும். அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. அதற்காகத் தான் சிறுநீரகத் திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

    திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல.... சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள்விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.

    மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.

    காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.

    அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

    அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.

    மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.

    எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

    ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

    • இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர்.
    • தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை:

    பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது.

    பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

    இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர். இது 1994 மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்திற்கு எதிரானது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு தரப்பில், "இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தெரியவந்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர்.

    தொடர்ந்து, "பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஐ.பி.எஸ். அலுவலர் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.

    • கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த ஆண்டில் (2024) 13,476 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில், தமிழ்நாட்டில் மட்டும் 1,796 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன்படி பார்க்கையில், இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. அதற்கு முந்தைய இடத்தில் டெல்லி இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில், கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் எவ்வளவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன? என்பது குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியல் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
    • ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.

    குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.

    இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

    அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.

    இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.

    கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    • 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
    • தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார்.

    வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகம் தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் மாமியார் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.

    கணவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதை அறிந்ததும், வரதட்சணைக்குப் பதிலாக சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யுமாறு மாமியார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

    தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார். புகாரி ஏற்று, தீப்தியின் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம்.

    பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சனை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.

    சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சனை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.

    இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

    பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.

    உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

    • தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.

    டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.

    மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

    இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
    • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    உலக கிட்னி விழிப்புணர்வு தினம் இன்று. சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.

    இதில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்து கொள்ள என் னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பிரபல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்திரராஜன் விளக்கினார். 

    அவர் கூறியதாவது:-

    அறிகுறி தெரியாது:

    எனக்கு கிட்னி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீர் நிறையவும் செல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு.

    சிறுநீரக பாதிப்பு என்பது வெளியே எளிதாக தெரிவதில்லை. 90 சதவீதம் சிறுநீரகம் செயலிழக்கும் வரை எந்தவிதமான அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கூட இருக்கும்.

    அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதும் சிறுநீரக பாதிப்பின் காரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதயம் ஒன்றே ஒன்று தான். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாலும் அறிகுறி தென்பட்டு விடும். அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று ஏதாவது பிரச்சினை இருக்கும்.

    ஆனால், கிட்னி இரண்டு இருப்பதால் 90 சதவீதம் பாதிக்கும் வரை அது தனது வேலையை செய்து கொண்டே இருக்கும். நமக்கு வெளியே தெரியாது. கிட்னி செயலிழப்பு என்பது 'சைலன்ட் கில்லர்' போன்றது.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    சிறுநீரக பாதிப்பு:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு தான் கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் என்பது பிரபலமானது.

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.

    அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த தஞ்சை மருத்துவ குழுவில் நானும் இருந்தேன். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக முடிவு செய்து குளுகோஸ் ஏற்றப்பட்டதும் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.

    ஆனால், அவரது ரத்த மாதிரியை நான் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர் டீன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நாளில்

    எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சிறுநீரகம் செயலிழந்து இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி சென்னை திரும்பினார்.

    டயாலிசிஸ்

    அந்த கால கட்டத்தில் டயாலிசிஸ்சும் பிரபலமாக வில்லை. எனது மனைவி தமிழிசை இரண்டு டயா லிசிஸ் கருவியை வைத்து 200 ரூபாய் கட்டணத்தில் வீட்டில் வைத்தே சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலி சிஸ் செய்து வந்தார்.

    அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஹர்ஷவர்தன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த நேரத்தில் டயாலிசிஸ் அவசிய தேவை பற்றி அவரிடம் பேசி கொண்டு இருந்தோம். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து டயாலிசிஸ் திட்டம் தொடர்பாக புள்ளி விபரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றது.

    தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

    டாலிசிஸ் சென்டர்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலும், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகிலும் டயாலிசிஸ் மையங்களை திறந்தார்.

    அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சி சார்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான்.

    அந்த பெருமை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேரும். இப்போது எல்லா மாவட்டங்களிலும் டயாலிசிஸ் வசதி கிடைக்கிறது.

    இதயமும், சிறுநீரகமும் மாமன் மைத்துனன் மாதிரி. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன் என்று ஒன்றை தொடர்ந்து இன்னொன்றும் பாதிக்கும்.

    கிட்னியின் நிலையை அறிந்து கொள்ள 'ஆல்புமின், கிரியேட்டின் அளவு, அடிவயிற்றுக்கு ஒரு ஸ்கேன் ஆகிய 3 பரி சோதனை மேற்கொண்டால் போதும்.

    பொதுவாக 32 வயதை கடந்தவர்கள் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

    குடும்பத்தில் யாராவது கிட்னி பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் மற்றவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பெற்றோரிடம் இருந்து சொத்து மட்டுமல்ல.

    இந்த மாதிரி வியாதிகளும் கிடைக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்றுவது முதல் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நம் சிறுநீரகங்களை நாம் கவனித்துக் கொள்கிறோமா?

    சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணி களைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். முக்கியமாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும். ரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்க்கும்.
    • புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

    உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.

    உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    1. திரவ உணவை உண்ணுங்கள்:

    தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.

    2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்:

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.

    3. புகைப்பழக்கம் மற்றும்  மதுப் பழக்கத்தை தவிருங்கள்:

    புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.

    4. ஆரோக்கியமான உணவை  உண்ணுங்கள்:

    அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.

    5. உப்பின் அளவை குறையுங்கள்:

    உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.

    6. பரிசோதனை மேற்கொள்ளுங்கள்:

    சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    • உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும்
    • 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

    உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது. குறிப்பாக என்ன சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதை அறிவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளிவரலாம்.

    உணவில் சேர்க்க வேண்டியவை

    * நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் (பூசணிக்காய்), சுரைக்காய், புடலங்காய், செளசெள போன்ற காய்களை எடுத்துக் கொள்ளலாம்.

    * இதனோடு வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிசாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை சாறாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும். சிறு தானியங்களையும் உணவில் சேர்த்து வரவேண்டும். எனினும் திரவ உணவுகள் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் தடுப்பதால் திரவ ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், காரட், பாகற்காய் போன்ற காய்கள் சிறுநீரகக்கற்களின் படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கிறது.

    * சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது கூட கல்லை கரைத்து வெளியேற்ற உதவும். மேலும் வாழைப்பழம், அண்ணாச்சி, தர்பூசணி, பப்பாளி, மாதுளை, நெல்லி போன்றவை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

    * நாம் அதிகமான அளவு நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறு நீரககற்களை குறைக்க உதவியாக இருக்கும். பொதுவாக சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமாகும்.

    தவிர்க்கக் கூடிய உணவுகள்:

    * உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும் காரம், புளி, மசாலா போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் அல்வா போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * காபி, தேநீர், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது அவசியம்.

    * மேலும் இத்துடன் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

    Dr. செ.பொன்ராஜ், MBBS, M.S., Mch (Uro) DLS, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், பொன்ரா மருத்துவமனை, திருநெல்வேலி.

    ×