என் மலர்
நீங்கள் தேடியது "கிட்னி திருட்டு"
- மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.
- சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.
இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த உத்தரவைக் காரணம் காட்டி, அறிவாலயம் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன்.
சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
- சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில லட்சம் கொடுத்து விட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சிக்கியது.
இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கும்பல், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கிட்னி தானம் கொடுப்பவர், பெறுபவரின் உறவினர் என போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் கிட்னி மோசடி கும்பலும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கிட்னி திருட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
* முதலமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
* அரசின் குழு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.
* சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது.
* சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
* சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.
* 2017-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
* சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
* விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
* பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 புரோக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
* தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும்.
* அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது.
* கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
* கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது.
- சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு, திமுக அரசு என்பது உறுதியாகியிருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய இ.கா.ப. அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்த நிலையில் தான் அதற்கு 4 நாள்கள் முன்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
மதுரை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 இ.கா.ப அதிகாரிகளும் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும். அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. அதற்காகத் தான் சிறுநீரகத் திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.
திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல.... சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள்விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
- நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.
மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.
காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.
அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.
மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.
எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.
- திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
- மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவக்கம்.
அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, #KarurTragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது.
ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின்
மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
- சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:
மணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ, கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டுள்ளார் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார். இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏ.வே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், தி.மு.க. அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாமக்கல்லில் நடந்த சம்பவம் சிறுநீரகம் திருட்டா அல்லது முறைகேடா என்று பட்டிமன்றம் நடத்த நான் விரும்பவில்லை.
- ஆரம்பகட்ட அறிக்கையின்படி இரண்டு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனைகளுக்கு தேவையான விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 82,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரு. 53 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதித்த குழந்தைகள் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் சிகிச்சை பெற வசதியாக இந்த புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதியும் செய்யப்படும்.
இதே போல புதிதாக விடுதி கட்டப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெறும் ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் தங்குவதற்கு வசதியாக 5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 அடுக்குமாடிகளுடன் இந்த விடுதி அமைகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் நடத்தப்பட்டதில் பதிவு கட்டணமாக பெறப்பட்ட ரூ .1 கோடியே 22 லட்சம் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வளாகத்தில் படுத்து தூங்குகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு சட்டமன்ற விடுதியில் தங்க வைத்து உதவி செய்து வருகிறோம். தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் 100 பேர் தங்கி சிகிச்சை பெற முடியும். செப்டம்பர் மாத இறுதியில் இந்த பணிகள் நிறைவடைகிறது. குழந்தைகள் சிகிச்சை பெரும் வரை பெற்றோர்கள் இங்கு தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படும். தங்குவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை.
தரைதளத்தில் சமையலறையும் உணவுக்கூடமும் அமைகிறது. ஒரு தளத்தில் 25 படுக்கைகள் வீதம் நான்கு தளத்தில் 100 படுக்கை வசதி செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் நடந்த சம்பவம் சிறுநீரகம் திருட்டா அல்லது முறைகேடா என்று பட்டிமன்றம் நடத்த நான் விரும்பவில்லை. அண்ணாமலை எப்படி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை. 2019-ம் ஆண்டில் இதே நாமக்கல்லில் நடந்த சிறுநீரக முறைகேடு வழக்கில் அ.தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்ததோடு சரி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே ஊரில் தான் இப்போதும் சிறுநீரக முறைகேடு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உள்ளார்.
ஆரம்பகட்ட அறிக்கையின்படி இரண்டு தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 4 அல்லது 5 நாட்களில் முழுமையான அறிக்கை வரும். அப்போது இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளை விற்று பிழைப்பது ஈனப் பிழைப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்வி இயக்குனர் தேரணி ராஜன், இயக்குனர்கள் லட்சுமி வேல்முருகன், சுமதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* கிட்னி திருட்டு தொடர்பாக மற்ற மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வினித் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
* கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
- திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது "கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு"; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள்.
ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
சரி, நீங்கள் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?
இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா? என்று வினவியுள்ளார்.
- இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
- தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 இலட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுப்படுத்தும் செயல். இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக 'கிட்னி', ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது.
சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று.
- தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தான் இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. ரூ.1 லட்சத்திற்காக சிறுநீரகத்தையே மக்கள் விற்கத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழக அரசு நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருந்து விட்டு இப்போது துறை சார்ந்த விசாரணை நடத்தப்போவதாக கூறுகிறது. அதில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.






