என் மலர்
நீங்கள் தேடியது "சிறுநீரகம்"
- போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
- பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் வறுமையை தெரிந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுநீரக மோசடியில் தொடர்புடைய புரோக்கர்கள், டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் கவுசல்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயா என்ற பெண்ணும் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திருச்சி, பெரம்பலூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று ஆய்வு செய்தனர். அதில் திருச்சி ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 6 பெண்களின் சிறுநீரகம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த முகவரிக்கு வந்து ஆய்வு செய்த போது அது போலியானது என்று தெரியவந்தது.
எனவே போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து இந்த சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே இவர்களை அழைத்து சென்ற புரோக்கர் ஆனந்தன் என்பவரை தேடி சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. வழக்கமாக ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டும் என்றால் அவரிடம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்பார்கள். அதற்கு ஏற்றாற் போல் சிறுநீரகம் கொடுக்கும் பெண்களை புரோக்கர்கள் தயார் செய்துஅழைத்து சென்று உள்ளனர்.
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை ஏராளமான பெண்களிடம் சிறுநீரகம் எடுத்து மோசடி நடந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோக்கர் ஆனந்தன் பிடிபட்டால் தான் எத்தனை பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டது என்ற முழுவிபரமும் தெரியவரும்.
இதற்கிடையே திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் திட்ட இயக்குனர் வினீத், மருத்துவ சட்ட துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மருத்துவ சட்ட பிரிவு டி.எஸ்.பி. சீத்தாராமன் மற்றும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி, பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்ததும் அவர்கள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
- கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- புளூபெர்ரி பழங்கள் அளவில் சிறியவை, ஆனால் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானவை.
- சிவப்பு நிற குடைமிளகாய் சிறுநீரக ஆரோக்கியதிற்கு பலம் சேர்க்கும்.
உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் சுமார் அரை கப் ரத்தத்தை வடிகட்டுவதுடன் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கின்றன. அத்துடன் உடலில் தேங்கியிருக்கும் கூடுதல் நீரை அகற்றி சிறுநீரை உருவாக்குகின்றன. மது அருந்துதல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தி அவை சரியாக செயல்பட விடாமல் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அவற்றை தவிர்ப்பதுடன் சரியான உணவுப்பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம். அதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இது...
1. காலிபிளவர்
இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைவாகவும் உள்ளன. அத்துடன் போலேட், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும் சேர்மங்களும் காலிபிளவரில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு சிறுநீரகங்களுக்கும் நன்மை பயக்கின்றன.
காலி பிளவரை பொரித்தோ, வேகவைத்து மசித்தோ உட்கொள்ளலாம். அரை கப் வேகவைத்த காலிபிளவரில் மிகக் குறைந்த அளவே சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது. அதிலிருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதுவும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காலிபிளவரை தவறாமல் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைக் குறைத்து, நச்சுகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்.
2. புளூபெர்ரி
புளூபெர்ரி பழங்கள் அளவில் சிறியவை, ஆனால் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானவை. அவற்றில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன. இவை சிறுநீரகங்களைப் பாதுகாக்க ஏற்றவை. அத்துடன் புளூபெர்ரியில் அந்தோசயினின்கள் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தை குறைக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
புளூபெர்ரியை தவறாமல் சாப்பிடுவது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரு நோய்கள்தான் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பவை.
3. சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு நிற குடைமிளகாய் சிறுநீரக ஆரோக்கியதிற்கு பலம் சேர்க்கும். அதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் ஏ, சி, பி6, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகப் பாதுகாப்பிற்கு உதவிடும்.
4. பூண்டு
பூண்டு உணவுக்கு சுவையை அதிகரிக்கச் செய்யும் என்பதை விட சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீரக சேதத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். எனவே சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது.
5. முட்டையின் வெள்ளைக்கரு
உடலுக்கு புரதம், பாஸ்பரஸ் அவசியமானவை. அதேவேளையில் அதிகப்படியான பாஸ்பரஸ் சிறுநீரகங்களுக்கு சிரமத்தை உண்டாக்கும். முட்டையின் வெள்ளைக்கருவில் பாஸ்பரஸ் குறைவாகவும், புரதம் போதுமானதாகவும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு அதிக சுமை கொடுக்காமல் செயல்பட வழிவகை செய்யும். உணவில் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்ப்பது சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைக்கும். அதே வேளையில் புரத உட்கொள்ளலை சமநிலைப்படுத்த உதவும். முட்டை சாப்பிட விருப்பமில்லை என்றால் பாலாடைக்கட்டி, டோபு வடிவில் உட்கொள்ளலாம்.
- 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது.
- ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக நிகழ்ந்த பரிசோதனைகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
91 சதவீத வழக்குகளில் சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 569 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பார்த்திவ்சிங் கட்வாடியா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அகமதாபாத் கார்ப்பரேஷன் மருத்துவமனையில் அங்கீகரிக்கப்படாத மருந்து பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சிறுநீரக நோயாளிகளின் இறப்புகள் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளன.
இதற்கிடையே அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை சோதனைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநருக்கு உத்தரவிட்டது.
கூடுதலாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) வெள்ளிக்கிழமை, அகமதாபாத் மாநகராட்சிக்குச் சொந்தமான VS மருத்துவமனை மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்குத் தடை விதித்தார். அவர்கள் 2021 மற்றும் 2025 க்கு இடையில் நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சுமார் 500 நோயாளிகளிடம் சுமார் 50 நிறுவனங்களின் மருந்துகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
- தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார்.
வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகம் தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் மாமியார் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.
கணவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதை அறிந்ததும், வரதட்சணைக்குப் பதிலாக சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யுமாறு மாமியார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார். புகாரி ஏற்று, தீப்தியின் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம்.
பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சனை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.
சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சனை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.
இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக இந்த பிரச்சனை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
- பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
- 'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.
பாலிவுட் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல்.
பாலிவுட் தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தின் வில்லனாக நடித்தவர்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்," தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியுள்ளார்.
இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
சிகிச்சையின்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறிய மருத்துவர்கள் அது குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், தன்னை பார்க்க வந்த நடிகர் அஜய் தேவகனின் தந்தை தினமும் காலையில் கழிக்கும் தனது சிறுநீரை 15 நாட்களுக்கு குடித்து வர கூறினார். அந்த 15 நாட்களுக்கு இறைச்சி, மது, சிகரெட் போன்ற பழக்கங்களும் இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறினார்.
அவர் கூறியதுபோல் தானும் அதை பின்பற்றினேன். மேலும், 15 நாட்களுக்கு பிறகு எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது எனது காயம் சரியானது. மூன்று மாதங்கள் ஆகும் என கூறிய நிலையில், ஒன்றரை மாதங்களிலேயே தான் முழுவதுமாக குணமடைந்துவிட்டேன். அதற்கு தான் குடித்த என்னுடைய சிறுநீரகம் தான் காரணம்" என கூறினார்.
- தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
- தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.
டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்க்கும்.
- புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.
உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
1. திரவ உணவை உண்ணுங்கள்:
தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.
2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.
3. புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கத்தை தவிருங்கள்:
புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.
4. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்:
அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.
5. உப்பின் அளவை குறையுங்கள்:
உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.
6. பரிசோதனை மேற்கொள்ளுங்கள்:
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.
- உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும்
- 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானது. குறிப்பாக என்ன சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பதை அறிவதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளிவரலாம்.
உணவில் சேர்க்க வேண்டியவை
* நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் (பூசணிக்காய்), சுரைக்காய், புடலங்காய், செளசெள போன்ற காய்களை எடுத்துக் கொள்ளலாம்.
* இதனோடு வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிசாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை சாறாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும். சிறு தானியங்களையும் உணவில் சேர்த்து வரவேண்டும். எனினும் திரவ உணவுகள் சிறுநீரக கற்களை வெளியேற்றுவதோடு மீண்டும் வரவிடாமல் தடுப்பதால் திரவ ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், காரட், பாகற்காய் போன்ற காய்கள் சிறுநீரகக்கற்களின் படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கிறது.
* சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது கூட கல்லை கரைத்து வெளியேற்ற உதவும். மேலும் வாழைப்பழம், அண்ணாச்சி, தர்பூசணி, பப்பாளி, மாதுளை, நெல்லி போன்றவை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
* நாம் அதிகமான அளவு நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறு நீரககற்களை குறைக்க உதவியாக இருக்கும். பொதுவாக சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க தினமும் 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது அவசியமாகும்.
தவிர்க்கக் கூடிய உணவுகள்:
* உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும் காரம், புளி, மசாலா போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா, பால் அல்வா போன்ற கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* காபி, தேநீர், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பாஸ்பேட் நிறைந்த உணவுகளை உண்பதை நிறுத்திக் கொள்வது அவசியம்.
* மேலும் இத்துடன் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
Dr. செ.பொன்ராஜ், MBBS, M.S., Mch (Uro) DLS, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், பொன்ரா மருத்துவமனை, திருநெல்வேலி.
- காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
- சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது.
காட்பாடி இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர், சிறுநீரக கற்கள் எதனால் உண்டாகிறது, அதற்கு அளிக்கப்படும் அதிநவீன லேசர் சிகிச்சை குறித்து கூறியதாவது:-
சிறுநீரகத்தில் ஒரு கோளாறு என்றால் அது சிறுநீரக கற்களால் ஏற்படும் வியாதியாக இருக்கும். இந்த சிறுநீரக கற்கள் ஒருவருக்கு உருவாகி இருந்தால் அந்த நபருக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி, உடலில் அதிக வேர்வை வருதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும், துரித உணவு சாப்பிடுபவர்களுக்கும், அதிக தூரம் பிரயாணம் செய்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உண்டாகும். அதிக வாகன ஓட்டிகளுக்கும், காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள்
சிறுநீரகத்தை மூன்று பகுதியாக பிரிக்கலாம். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீரகப்பை ஆகியவை ஆகும். இந்த 3 பகுதியில் எந்தப் பகுதியிலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் அந்தந்த இடத்தில் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் வேறுபடும்.
உதாரணத்திற்கு சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது. 3 சென்டிமீட்டர் அளவுக்கு கல் இருந்தாலும் அது வலியை தராது. ஆனால் அதுவே சிறுநீர் குழாயில் ஒரு சிறிய அளவு 4 மில்லி மீட்டர் அளவு கற்கள் அடைப்பு ஏற்பட்டாலும் அதிக வயிற்று வலி, வேதனை, வாந்தி, சிறுநீரக எரிச்சல், காய்ச்சல் வருதல் ஆகியவை ஏற்படும். இதில் மூன்றாவது வகை, சிறுநீரகப் பையில் ஏற்படும் கற்களால் சிறுநீர் போகும் போது எரிச்சல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கடுப்பு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தல், சொட்டு சிறுநீர் ஆகியவை அறிகுறிகள் ஆகும். இதனால் வெவ்வேறு பகுதிகளில் கற்களினால் ஏற்படும் அறிகுறிகள் வித்தியாசப்படும்.
லேசர் சிகிச்சை
பழைய முறையில் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே கற்கள் அகற்றப்பட்டது.
ஆனால் இப்போது அறுவை சிகிச்சை இல்லாமல் வயிற்றுப் பகுதியில் ஒரு கீறலும் இல்லாமல், லேசர் சிகிச்சையின் மூலம் கற்களை கரைத்து சிறுநீர் வழியாக ஸ்டண்ட் வைத்து அதை வெளியேற்றலாம்.
சிறுநீரக குழாயில் மற்றும் சிறுநீரகத்தில் செய்யப்படும் லேசர் முறையால் கற்களை சிறு, சிறு துகள்களாக உடைப்பார்கள் அந்த துகள்கள் வெளியேறுவதற்கும் சிறுநீரக குழாயில் அடைப்பு ஏற்படாமல் ஒரு வீக்கம் வருவதை தடுப்பதற்காக இந்த ஸ்டண்ட் வைக்கப்படுகிறது. இது பொதுவாக 15 நாட்களில் இருந்து 25 நாட்களுக்குள் அகற்றப்படும்.
பழைய அறுவை சிகிச்சை முறையில் 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது. தற்போது லேசர் சிகிச்சை செய்பவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.
திரும்ப கற்கள் உண்டாகுமா?.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ரத்தத்தின் அளவில் அதிகமாக இருப்பதால் இது போன்ற கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, கால்சியம் அளவு எதனால் அதிகம் இருக்கிறது என்பதை ரத்த பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், நீர் அருந்துதல், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்து நம்முடைய வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக் கொண்டால், சிறுநீரக கற்களில் இருந்து பூரண விடுதலை பெறலாம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகளும் உள்ளன.
- கால்சியம், வைட்டமின் ‘டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
சிறுநீரகக் கற்களுக்கு சித்த மருத்துவம்: சிறுகன்பீளை, நெருஞ்சில் விதை, மூக்கிரட்டை இவைகளை பொடித்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என இருவேளை குடிக்கவும். மாவிலங்கப்பட்டை, தொட்டால் சிணுங்கி, வெட்டிவேர் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
கல்லுருக்கி இலை (Scoparia dulcis) மற்றும் இரணகள்ளி இலை (Kalanchoe pinnata) போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர ேநாய் குணமாகும். சித்த மருந்துகளில், வெடியுப்புச் சுண்ணம் 50 மி.கி., நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை நீர்முள்ளிக் குடிநீரில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். அமிர்தாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகள்: விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும், பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாகுவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கால்சியம் அளவில் குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.
இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை சிறுநீரகக் கல் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும். வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்கவேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499






