என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சிறுநீரகங்களை வலிமையாக்கும் 5
    X

    சிறுநீரகங்களை வலிமையாக்கும் '5'

    • புளூபெர்ரி பழங்கள் அளவில் சிறியவை, ஆனால் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானவை.
    • சிவப்பு நிற குடைமிளகாய் சிறுநீரக ஆரோக்கியதிற்கு பலம் சேர்க்கும்.

    உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் சுமார் அரை கப் ரத்தத்தை வடிகட்டுவதுடன் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கின்றன. அத்துடன் உடலில் தேங்கியிருக்கும் கூடுதல் நீரை அகற்றி சிறுநீரை உருவாக்குகின்றன. மது அருந்துதல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தி அவை சரியாக செயல்பட விடாமல் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அவற்றை தவிர்ப்பதுடன் சரியான உணவுப்பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம். அதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இது...

    1. காலிபிளவர்

    இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைவாகவும் உள்ளன. அத்துடன் போலேட், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவும் சேர்மங்களும் காலிபிளவரில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு சிறுநீரகங்களுக்கும் நன்மை பயக்கின்றன.

    காலி பிளவரை பொரித்தோ, வேகவைத்து மசித்தோ உட்கொள்ளலாம். அரை கப் வேகவைத்த காலிபிளவரில் மிகக் குறைந்த அளவே சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது. அதிலிருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதுவும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காலிபிளவரை தவறாமல் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களின் பணிச்சுமையைக் குறைத்து, நச்சுகளால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்.

    2. புளூபெர்ரி

    புளூபெர்ரி பழங்கள் அளவில் சிறியவை, ஆனால் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானவை. அவற்றில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளன. இவை சிறுநீரகங்களைப் பாதுகாக்க ஏற்றவை. அத்துடன் புளூபெர்ரியில் அந்தோசயினின்கள் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தை குறைக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

    புளூபெர்ரியை தவறாமல் சாப்பிடுவது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரு நோய்கள்தான் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பவை.

    3. சிவப்பு குடைமிளகாய்

    சிவப்பு நிற குடைமிளகாய் சிறுநீரக ஆரோக்கியதிற்கு பலம் சேர்க்கும். அதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் ஏ, சி, பி6, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகப் பாதுகாப்பிற்கு உதவிடும்.

    4. பூண்டு

    பூண்டு உணவுக்கு சுவையை அதிகரிக்கச் செய்யும் என்பதை விட சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீரக சேதத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். எனவே சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பானது.

    5. முட்டையின் வெள்ளைக்கரு

    உடலுக்கு புரதம், பாஸ்பரஸ் அவசியமானவை. அதேவேளையில் அதிகப்படியான பாஸ்பரஸ் சிறுநீரகங்களுக்கு சிரமத்தை உண்டாக்கும். முட்டையின் வெள்ளைக்கருவில் பாஸ்பரஸ் குறைவாகவும், புரதம் போதுமானதாகவும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு அதிக சுமை கொடுக்காமல் செயல்பட வழிவகை செய்யும். உணவில் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்ப்பது சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைக்கும். அதே வேளையில் புரத உட்கொள்ளலை சமநிலைப்படுத்த உதவும். முட்டை சாப்பிட விருப்பமில்லை என்றால் பாலாடைக்கட்டி, டோபு வடிவில் உட்கொள்ளலாம்.

    Next Story
    ×