என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிகிச்சைக்கு வந்ததோ வலது காலுக்கு...! அறுவை சிகிச்சை செய்ததோ இடது காலுக்கு...! - அரசு ஆஸ்பத்திரியில் அலட்சியம்
- மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
- மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் பகல் 12.45 மணிக்கு வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.