என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சை அரசு டாக்டர்களுக்கு அதிரடி உத்தரவு
- தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
- அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.
அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.






