search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 15), சுரபிகா (8), ராஜேஸ்குமார் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களில் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கருப்பசாமி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வுக்காக மாணவி பிரியதர்ஷினி படித்துக் கொண்டு இருந்தார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டதும் கதறி அழுதார். அவரது வகுப்பு ஆசிரியர் கண்ணபிரான் மாணவிக்கு ஆறுதல் கூறி தைரியமாக தேர்வு எழுத செல்லுமாறு கூறினார்.

    வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி பிரியதர்ஷினி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
    • குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

    கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.

    தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
    • தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக என். புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கையின் தெருமுனை பிரசாரக் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    இதை அறிந்த நிலக்கோட்டை தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரவீன் தலைமையில் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பதாக கூறி அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ஆனால் தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் கூட்டம் நடத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
    • வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    முன்னதாக நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

    மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொடியேற்றத்தைக் காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.10 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளான பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றனர். விழாவின் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்ட குருக்கள்கள் செய்து வருகின்றனர்.

    • அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
    • வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.

    இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.

    அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மதுரையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கார் மூலம் நேற்று வந்தார். வரும் வழியில் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அமைச்சர், அவரிடம் இருந்த துண்டுச்சீட்டை வாங்கி பார்த்து அது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், இது ஓ.பி. (புறநோயாளிகள்) பதிவு சீட்டு என்றார். அவரது பதிலை கேட்ட அமைச்சர், அங்கிருந்த டாக்டரை கண்டித்தார். நோயாளிகளுக்கு அச்சடித்து ஓ.பி.பதிவு சீட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருந்து குடோனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது தரையில் மருந்துகள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த அமைச்சர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி கொடுத்தால் அதனை பாதுகாப்பாக வைக்க கூட முடியாதா? என்று மருத்துவமனை ஊழியர்களை கடிந்து கொண்டார்.

    இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கிருந்தபடியே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் மருத்துவ அதிகாரியிடம் செல்போனில் பேசிய அமைச்சர், சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவமனையை சரியாக பராமரிப்பு செய்யாததால், டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
    • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

    குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

    இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


    இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

    இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

    • பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே கிடைக்கிறது.

    கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

    திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

    ×