கேரளா முதல் காஷ்மீர் வரை... குடும்பத்துடன் 'சைக்கிள் கேரவனில்' வாலிபர் பயணம்

வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
கேரளா முதல் காஷ்மீர் வரை... குடும்பத்துடன் 'சைக்கிள் கேரவனில்' வாலிபர் பயணம்
Published on

நத்தம்:

கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com