என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani temple"

    • பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
    • சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாரல் மழை தொடங்கியுள்ள நிலையில் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாலை 4.30 மணி முதல் சுடச்சுட சுக்கு காபி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடும் குளிருடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் சுக்கு காபி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது.

    சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    • திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    பழனி:

    தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    • மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
    • கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அக். 22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.27) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக, பெரியநாயகியம்மன் கோவிலில் 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் 4 விதமான சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும்.

    ஆனால் பழனியில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என 4 திசைகளிலும் தனித்தனியாக சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹாரத்தையொட்டி, நாளை (அக்.27) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.

    பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் நடைபெற்ற சூரன்களை தயார் செய்யும் பணி.

    மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.

    பிற்பகல் 3 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். தொடர்ந்து திரு ஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். இதையொட்டி நாளை காலை 11.30 மணிக்கு அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    விழாவின் நிறைவாக நாளை மறுநாள் (அக்.28) காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். 

    • பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
    • அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் அறையை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 45 லட்சம் மதிப்பில் உபயதாரர் மூலம் புதுப்பிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

    அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அன்னபூரணி மற்றும் பொறியாளர்கள் குமார், முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் தங்கத் தொட்டிலில் போடும் குழந்தைகளுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு 2 பஞ்சாமிர்த டப்பாக்காள், விபூதி, முருகன் படம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.

    இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.

    தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
    • பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.

    படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது.
    • திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்களுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் கோவில்களில் எப்போதும் மக்கள் கூட்டமாக இருந்து வருகிறது.

    நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கவும், நீண்ட நேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) கொண்டுவர உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும்.

    முதல்கட்டமாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலிலும் 'பிரேக்' தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைன் மூலம் தரிசன தேதி, நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.

    இந்த 'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். 'பிரேக்' தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

    பழனி கோவிலைப் பொறுத்தவரை, ரூ.300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது. அதே முறை இந்த 3 கோவில்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோவில்களை தொடர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    • பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
    • தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    இங்கு இலவச தரிசனம் மட்டுமின்றி ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இவை தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் ஆகிய பிரமுகர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. சமீப காலமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சாதாரண நாட்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பிரேக் தரிசனம் எனப்படும் இடைநிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதனையடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விரைவில் இந்த வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை 1 மணிநேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கார்த்திகை, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு உள்பட முக்கிய விஷேசங்கள் வரும் 44 நாட்கள் செயல்படுத்தப்படமாட்டாது.

    இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

    பிரேக் தரிசன சேவையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வருகிற 29ம் தேதிக்குள் பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.

    • நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளிமாநில முதல்-மந்திரிகள், நடிகர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் வந்து செல்கின்றனர்.

    நடிகர் சூர்யாவின் புதிய படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனையொட்டி அவர் இன்று பழனிக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரி பிருந்தா மற்றும் லக்கி பாஸ்கர் பட டைரக்டர் வெங்கட் அட்லூரி ஆகியோரும் வந்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்ற நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இன்ப அதிர்ச்சியாக நடிகர் சூர்யாவை பார்த்து அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    இதனால் பஸ்நிலையம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். 

    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
    • சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.

    இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    ×