என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பழனி கோவிலில் தரக்குறியீடு பெற்ற பால் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்- தேவஸ்தானம் அறிவிப்பு
    X

    பழனி கோவிலில் தரக்குறியீடு பெற்ற பால் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்- தேவஸ்தானம் அறிவிப்பு

    • திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    பழனி:

    தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×