என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசன கட்டணம்"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
    • பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.

    கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர்.

    இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.பி. பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் சரவணன் தெரிவிக்கையில், பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி பழனி இடும்பன்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக இடும்பன்குளத்தில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்றனர். அதேபோல் மலைக்கோவில், அடிவாரம் என 12 இடங்களில் மீட்பு பணி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்
    • கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

    இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்யும் பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

    மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி உள்ளனர்.
    • கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், விஸ்வரூப தரிசன கட்டணத்தை ரூ.100 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியும் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. இந்து அறநிலையத்துறையினரின் செயலானது கடவுளை காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக உள்ளது.

    அத்துடன் முக்கியமான விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, அல்லது பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கட்டணத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்?. முக்கிய விழாக்காலங்களில் கோவில்களில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பது தெரிந்தும் தமிழக அரசு கண்டும் காணாதது மாதிரி நடந்து கொள்வதை சிவசேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×