என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாணம்"

    • மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

    இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

    • மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.

    மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-

    மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.

    மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.

    ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.


    கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.

    அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர். 

    • தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
    • பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவம் முதல் அட்சயம் வரையிலான தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது.

    முன்னதாக சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வள்ளி இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாம்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள் ஆகியவற்றை சுமந்தவாறு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சீர்வரிசை அளித்தனர்.

    பின்னர், முருகப்பெருமான்-வள்ளி ஆகியோருக்கு மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து, மாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    • விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
    • பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.

    அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

    தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

    திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.

    இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • சுப்பிரமணியசாமி ஹோமம் நாளை வரை நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சுப்பிரமணியசாமி ஹோமம் தொடங்கியது. நேற்று நடந்த சுப்பிரமணியசாமி ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை சிறப்புப்பூஜை, ஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹோமம், சஹஸ்ரநார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை மாலை 5:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    • தினமும் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
    • நவம்பர் 1-ந்தேதி ஊஞ்சல் உற்சவம், சாந்தாபிஷேகமும் நடக்கிறது.

    கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    நேற்று 4-வது நாள் விழாவை காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்-வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 1-ந்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகமும் நடைபெறுகிறது.

    • முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
    • மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.

    நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.

    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்படி நேற்று சின்னக்குமாரர் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சின்னக்குமாரர் சூரசம்ஹாரத்துக்காக மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் வருகிறார். திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பழனி மலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரிவீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    • சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

    இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவில் பட்டினபிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.

    7-ம் நாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    அதன்பிறகு தெற்கு ரதவீதி, மேல ரதவீதி சந்திப்பு பகுதியில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு சென்றனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×