search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani"

    • ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
    • தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
    • காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.

    தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
    • பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழனியில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து யானைப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியே அசைந்தாடி சென்றதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசமுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை.
    • பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை.

    நமக்கு வீடு இருப்பது போல முருகனுக்குப் படை வீடுகள் இருக்கின்றன. அவற்றை ஆறுபடை வீடு என்று வர்ணிப்பது வழக்கம். அந்த ஆறுபடை வீடுகளும் ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை வளம்பெற பொருளாதாரமும், அருளாதாரமும் நமக்குத் தேவை. அருணகிரிநாத பெருமான் முருகப்பெருமானை நோக்கிப் பாடும்பொழுது, 'அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியால் இடைஞ்சல் களைவானேய' என்று குறிப்பிடுவார்.

    ஒரு மனிதன் பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை. அவை ஆரோக்கியம், நல்ல உறவு, பொருளாதாரம், அபயம் எனப்படும் பாதுகாப்பு ஆற்றல், ஆளுமைத்திறன், நிறைவான ஞானம். இந்த ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.

    • காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
    • பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

    கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

    பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.

    ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.

    கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

    காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

    ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

    காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

    காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும்.

    ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

    மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

    பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

    பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள்.

    ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

    மனம் முழுவதும் அந்தமயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.

    முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

    நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும்.

    எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

    ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

    அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.

    மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டியது அவசியம்.

    அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

    வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.

    நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    • ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
    • மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    சஷ்டி விரதம் வழிமுறைகள்

    கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

    அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.,வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

    கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

    நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.

    பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.

    இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும்.

    பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.

    ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு.

    அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

    இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.

    சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

    • குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
    • கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்

    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

    எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.

    சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.

    இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.

    சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

    கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,

    தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

    • அறுகோண வடிவிலான ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
    • இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.

    அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டத்திக்கு பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தெய்வங்கள், தேவதைகளை எழுந்தருளச் செய்வர்.

    உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

    ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.

    அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

    அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.

    அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.

    இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

    இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புவார் அத்துடன் சூரசம்ஹார வைபவமும் நிறைவடையும்.

    ராஜகோபுரம் திறக்காதது ஏன்?

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    பிரதான கோபுரத்தை சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

    அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    • சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
    • ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    கந்த சஷ்டிவிரதம்

    கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

    சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.

    ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

    இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.

    செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

    தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.

    இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.

    ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

    பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.

    இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

    • கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
    • பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?

    * கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    * பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    * ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

    *ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

    பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!

    ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.

    கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.

    இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.

    கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.

    காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.

    மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

    சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

    • செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.
    • எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாய்க்கு, `அங்காரகன்' என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தை புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளை கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்கு சென்று அங்குத்தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி. தேவியைப்பிரிந்து யோகத்தில் இருந்த சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வியர்வை உண்டாகி பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு `பூமி புத்திரன்' என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரிய பதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும் பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும், அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும் பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    பழனி

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய்ப்பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும். பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும். பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனைத்தரிசிக்க வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக்கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும். சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும். திருமண தோஷத்திற்கு மட்டும் கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மேலக்கடம்பூர்

    சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் மேலகடம்பூர் உள்ளது. கருவறையின் அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    செவ்வாய் பகவான் வழிபட்டதோடு அவரது அதிதேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டுவில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும். எனவே இத்திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.

    திருச்சிறுகுடி

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதை யில் சென்று கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையை கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம். இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர்-மங்கள விநாயகர் என்றும், இறைவன்-மங்கள நாதர் என்றும், அம்பாள்-மங்கள நாயகி என்றும், தீர்த்தம்-மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள் விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்று செல்ல வேண்டும். முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும். மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித்தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    ×