search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி"

    • பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்கின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.

    மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் வரிசையில் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லாததால் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. 

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    பழனி:

    தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல காத்திருந்தனர்.

    பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.

    மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.

    அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.

    இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.

    திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.


    பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.

    சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.

    • மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
    • மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு

    ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர் மோஜன் ஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் அதனை உறுதிப்படுத்த வேண்டும். கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    • பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை மோகன் ஜி தெரிவித்தார்.
    • மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

    பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஜாமினில் வெளியே வந்த மோகன் ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த தைரியத்தில் தான் நான் பேசினேன். ஆந்திராவில் முதல்வரே இப்படி கூறும்போது, தமிழ்நாட்டில் இப்படி நடப்பதாக எனக்கு செவிவழி செய்தி கிடைத்ததே... இந்த மாதிரி இருக்கலாம் இருந்திருக்கலாம் ஒருவேளை இருந்தால் அதை சரி செய்திருக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பேசினேன். ஆனால் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    எனக்கு ஆதரவளித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பேரரசு ஆகியோருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

    • பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ வைரலானது.
    • சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர். மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்ற ஜாமினில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மோகன் ஜி கைதிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
    • மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

    டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

    இதில், மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு, நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    நாட்டின் கொரோனா தொற்றுக்கு பின் அடுத்தடுத்து பல்வேறு நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய கடமை மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு இருக்கிறது. 

    தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு இளம் மருத்துவர்கள் அடுத்தடுத்து மருத்துவத் துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

    மருத்துவ நெறிமுறைகளை கொண்டு செல்லும் விதம் குறித்தும் தற்போது உள்ள நிலைமையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் வரவேற்க வேண்டும்.

    மாணவர்களின் ஆராய்ச்சிகள் வருங்கால மருத்துவத்தில் வரவேற்றகதக்க ஒன்று. பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக எழும் புகார் முற்றிலும் தவறு. இதுப்போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.

    பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முப்பரிமான பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோயில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு நீதியரசர் சுரேஷ்குமார் அவர்களுக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

    2ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்பு முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.

    அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்ற கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரையும், சத்திய வேல் முருகனார் சிறப்புரையும் ஆற்றினர்.

    அதன் பின்பு மொரிசீயஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.



    அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    பின்னர் கர்நாடக பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் முனைவர் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-ம் நாள் நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மதியம் மற்றும் இரவு உணவுக்கும் ஊழியர்கள் தயார் நிலையில் அதற்கான பணிகளை செய்து வந்தனர். முன் பதிவு செய்து வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு சிறப்பு அரங்கில் உணவு வழங்கப்பட்டது.


    2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 8.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    விருதுகளை நீதியரசர் வேல்முருகன் வழங்க உள்ளார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் இடம்பெற்றுள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மலைக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    • 69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.

    பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு கொடியை ரத்தின கிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இ.பெரியசாமி, சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கோவிலை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்து உள்ளார்.

    நாள் தோறும் ஆன்மிக பெரியவர்கள், அறநிலையத்துறையையும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது.

    நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து, குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்தவாரி யாரும் பாராட்டினார்கள்.

    இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதோட அடையாளம்தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.


    அந்த வகையில் பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வரும் பணிகளின் பட்டியலை தரச்சொல்லி அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை ரூ.58 கோடியே 54 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அறுபடை வீடு முருகன் திருக்கோவில்களில் ரூ.789 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில் ரூ.277 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.

    69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.

    பழனி திருக்கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோவில் திருக்கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை ரூ.4000 ஆக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1500 வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கி வருகிறோம்.


    2024-ம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்துக்காக 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவாார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுநாள் வரை 813 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    எல்லா திருக்கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டண மில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    தவில், நாதசுவர கல்லூரி, அர்ச்சகர் மற்றும் வேதஆகம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை 24.11.2023 முதல் ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த திருக்கோவில்களில் பணிபுரிந்து பணி காலத்தில் மறைவு எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை திருக்கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்த 1298 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    திருக்கோவில் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல, ஊக்கத் தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பூ தியத்தில் பணிபுரிந்த 1298 பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

    ஏதோ திடீரென்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அது மட்டுமல்ல அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்படும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயக்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டு காலத்தில் 1355 திருகோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3776 கோடியில் 8436 திருக்கோவில்களில் திருப்பணிகள், ரூ.50 கோடியில் கிராமப்புற ஆதிராவிடர் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். ரூ.62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோவில்களில் ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடியே 50 லட்சத்தில் பழனி, இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரூ.5577 கோடி மதிப்புடைய 6140 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.

    கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோபர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64522 கற்கள் நடப்பட்டு உள்ளன.

    4189 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு.

    நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் சிலவற்றை தான் நான் இப்போது சொல்லி இருக்கிறேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கி படிக்க வேண்டும். ஊடக துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அந்த சானைகளுக்கு மகுடம் வைத்தது போல பழனியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மிக வரலாற்றிலேயே மிக சிறப்பான இடத்தை பெறும்.

    நீதியரசர்கள், மகாசன்னி தானங்கள், ஆன்மிக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், பாடகர்கள் என பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கிற இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.

    மாநாட்டில் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுரு பரசு வாமிகள, ரத்தினபுரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்றை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மொ.நா.பூங்கொடி, கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், வேல்முருகன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் முருகனின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமண பாடலங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வரங்கங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கல்தூண் வடிவம் போன்று இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தையும் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உருவாக்கி அழகு படுத்தினர்.

    கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயர்கள், முருகன் பெயரில் உள்ள பெண்களுக்கான தமிழ் பெயர்கள், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முருகனின் கோவில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக்கலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம்பெற்றுள்ளன.

    மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

    மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென் மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    * பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியை பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் பாராட்டி வருகின்றனர்.

    * கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    * 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர்.

    * 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

    * ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்.

    * கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்.

    * அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும் என்று கூறினார்.

    • அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
    • அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.

    * அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    * அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

    * முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.

    * கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.

    * 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    • மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
    • உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'

    ×