என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabishekam"

    • 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7-ந்தேதி கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடந்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷே விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷே விழா நிறைவடைந்த பிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மண்டல பூஜை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல நிறைவு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை விழாவிற்காக பெங்களூரை சேர்ந்த திருமலை திருப்பதி, ஸ்ரீமன் நாராயணா சபா சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோவிலை அலங்காரம் செய்வதற்காக அலங்கார பொருட்கள், மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந்த அலங்காரத்தில் தென்னங்குருத்து இலை, அந்தோனியம், ரோஸ், கிசாந்திமம், ப்ளூ டெசி, ஜெர்ப்புறா, ஜிப்ஸி, சுகர் கேன், காமினி, டேய் சுனிஸ், செக்ஸி ஹலோ கோனியோ, ஆர்கிட்ஸ், ஆரஞ்சு, அண்ணாச்சி பழம், சோளக்கருகு, கரும்பு உள்பட பல்வேறு வகையான அலங்கார பொருட்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டது.

    கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபம், மூலவர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், விநாயகர் பெருமாள், கொடிமரம், நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டது.

    இதற்காக பணியில் சேலம், சென்னை, பெங்களூரு, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 110 பணியாளர் ஈடுபட்டனர்.

    மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு மண்டல பூஜை அபிஷேக பூர்த்தி பூஜை தொடங்கி நடைபெற்றது.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
    • 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

    தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

    இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.

    • சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன், மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    திருச்செந்தூர்:

    தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

    இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ரூ.300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந் திட்டவளாகப் பணிகள் தொடங்கியது. இதில் பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்றதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை 7-ந்தேதி(இன்று) கும்பாபிஷேக விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து நடந்தது.

    இதைத்தொடர்ந்து கோவிலின் மேற்கு கோபு ரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாக சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8 ஆயிரம் சதுர அடி யில் பிரம்மாண்ட யாக சாலை பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது.

    அங்கு கடந்த 1-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர் 5, நடராஜர் 5, பெருமாள் 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு காலை, மாலை என ஒவ்வொரு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

    நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கோவிலை சுற்றி வந்த கடத்திற்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷ மிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர்.

    தொடர்ந்து ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்பட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது.

    அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், கோவில் தக்கார் அருள் முருகன், சிருங்கேரி சாரதா பீடாதிபதி விதுசேகர பாரதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடு துறை ஆதீன குரு மகா சன்னிதானம், தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், ஜப்பான் நாட்டை சேர்ந்த பாலகும்பா குருமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20 ராட்சத டிரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு டிரோன் மூலம் 3முறை பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழா வில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர். 

    • காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.

    நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.



    பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன. இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் நேற்று நேரில் பார்வையிட்டார்.

    மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1-ந்தேதி மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்றும் வரும் இறுதிகட்ட பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். 

    • 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
    • தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.

    இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பதிக்கு இணையாக பக்தர்கள் எளிதாக நீண்ட வரிசையில் வெகு நேரம் நிற்காமல் அமர்ந்து ஒய்வு எடுத்து அகன்ற திரையில் படம் பார்த்து தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசன மண்டபம், நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பயணிகள் தங்கும் விடுதிகள் என முடிவுற்ற பணிகளை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நாளை (1-ந்தேதி) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்குகிறது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
    • கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தக்கார் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞான சேகரனிடம் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு தாம்பூலம் பெறுதல் நடந்தது.

    நேற்று காலையில் விநாயகர் வழிபாடு வேள்வி, மாலையில் எண் திசைத் தேவர்கள் வழிபாடு திசா சாந்தி வேள்வி நடந்தது. இன்று காலையில் நவக்கிரக வேள்வி, மாலையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி தேவதை வழிபாடு நடக்கிறது.

    வருகிற 1-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 12 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 இடங்களில் பிரம்மாண்டமான வகையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில் அலங்காரத்துடன் யாககுண்டம் அமைந்துள்ள பகுதிகள் தங்கநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கிரி பிராகாரத்திலுள்ள மரங்கள் உள்ளிட்ட இடங்களில் அலங்கார விளக்குகள் தொடங்க விடப்பட்டுள்ளன.

    7-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாக வழிபாடு நடைபெற்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50மணிக்குள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) மதியத்தில் இருந்து மறுநாள் 7-ந் தேதி மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மதியத்திற்கு பிறகுதான் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் சுவாமி சண்முகரை தரிசனம் செய்யலாம்.

    யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் 1,500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 பஸ்கள் திருச்செந்தூர் வந்து செல்கின்றன. அதனுடன் சேர்த்து மொத்தம் 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தனியார் வாகனங்கள் நிறுத்த 18 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 30 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது

    மேலும் கூடுதலாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் வசதிக்காக 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது. சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    ஜூலை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மூலம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    60 அகன்ற எல்.இ.டி.திரை மூலம் வாகன நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தும் இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது.

    புகழ்பெற்ற சுசீந்திரம் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 18 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து சுசீந்திரம் தெற்கு மண்மடத்தைச் சேர்ந்தவரும், சுசீந்திரம் கோவில் நித்திய யோகஸ்தானியருமான திலீப் நம்பூதிரி (வயது 53) கூறியதாவது:-

    நாங்கள்தான் கோவில் திருவிழாக்களின்போது கொடியேற்றுவோம். யாருடைய அனுமதியும் இன்றி நாங்கள் கோவிலுக்குள் சென்றுவர எங்களுக்கு உரிமை உண்டு. கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஊர்மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இதனால் உருவாகும் தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். களபபூஜை நடத்துவது ஊர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். அதேபோல்தான் கும்பாபிஷேகத்தையும் நடத்த வேண்டும். எனவே அரசு எவ்வளவு சீக்கிரமாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

    சுசீந்திரம் கோவில் வட்டப்பள்ளி ஸ்தானிகரும், ஆயுர்வேத டாக்டருமான சிவபிரசாத் (45) கூறியதாவது:-

    கோவில்களை பொறுத்தவரையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சாதாரணமாக கும்பாபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும்போது மொத்தத்தில் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.

    கோவிலில் உள்ள இடர்பாடுகள், பழுதுபார்க்கும் பணிகள், சுத்தப்படுத்த வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும். இந்த பணி என்பது நமது வீட்டை எவ்வாறு பராமரிப்பு செய்வோமோ அதுபோன்றதுதான் கோவில் கும்பாபிஷேகப்பணியும். 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளை கடந்து அதிகமாக 6 ஆண்டுகளும் ஆகிவிட்டது.

    கடந்த திருவிழாவின்போதே அதிகாரிகள் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்கள். கோவில்கள் ஒவ்வொரு ஊருக்கும் பலன் தரக்கூடியதாகும். கும்பாபிஷேகம் செய்யும்போது ஊருக்கும், மக்களுக்கும் புண்ணியங்களும், நன்மைகளும் கிடைக்கும். எனவே எவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் ஆகிய கோவில்கள் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களாகும். இதற்காக திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும்.

    சுசீந்திரம்தாணுமாலயன்சாமி கோவில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக மாடர்ன் டைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைக்கும் பணி ரூ.76 லட்சத்திலும், உபசன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் பணி ரூ.21 லட்சத்திலும், மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணி ரூ.62 லட்சத்திலும், கருங்கல்லால் ஆன கட்டமைப்புகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, வரிவாளம் அமைக்கும் பணி ரூ.39 லட்சத்திலும், விமானங்களில் வர்ணம் பூசுதல் பணி ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், ராஜகோபுரத்தில் திருப்பணி ரூ.30 லட்சத்திலும், மின் இணைப்பு பணி ரூ.25 லட்சத்திலும் என மொத்தம் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியம் நன்றாக உள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட 3 கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டு வரும் அய்யப்ப சாமி கோவிலின் எழில் மிகு தோற்றம்.

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினரால் புதிதாக அய்யப்ப சாமிக்கு கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், துறவிக்காடு சாலையின் வடபுரத்தில் அய்யப்ப சாமிக்கு கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    அய்யப்ப சுவாமி கோவிலின் திருப்பணி வேலைகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெறும் நிலையை எட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அய்யப்ப சுவாமிக்கும் அதன் பரிவார தெய்வங்களான கன்னி மூல கணபதி, நாகராஜா சாமி, மஞ்சமாதா, கடுத்தசாமி, கருப்பர் சாமி ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ராமநாதன் தலைமையில் திருச்சிற்றம்பலம் துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கும்பாபிஷேக விழா நாளை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
    • 11-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    குறிஞ்சிப்பாடி அருகே திருத்தினை நகரில் பிரசித்தி பெற்ற சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹீதி ஆகியவை நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், முதல் காலயாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஆஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.

    பின்னர் 9 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர், காத்தவராயன், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1919-ம் ஆண்டிற்கு முன்பு நூற்றாண்டு காலம் சிறிய சிவாலயமாக இருந்து பின்னர் பரம்பரை அறங்காவலர்களால் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் கோவிலின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கோவையின் ராமேஸ்வரம் என இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்த கோவிலில் புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு சுமார் 3000 சதுரடியில் கோவிலுக்கு என்று நிரந்தர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி 27 குண்டங்கள் அடங்கிய யாகசாலையும், ஆகம விதிகளின்படி மந்திரங்கள் ஓதப்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9-ந் தேதி காலை முதல் கால யாக வேள்வி பூஜை, தீபாராதனையும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தொடர்நது 10-ந் தேதி (இன்று) விசேஷ சாந்தி, பூத சுத்தி, 108 த்ரவ்யாஹூதி, கோபுர விமான கலச பிரதிஷ்டையும், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர ஸ்தாபனமும், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. மாலை விநாயகர் பூஜை, மண்டப பூஜை, யாக குண்ட பூஜை உடன் சிவபெருமானுக்கு எந்திர ஸ்தாபனமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 11-ந் தேதி காலை நான்காம் கால வேள்வி பூஜை மகா சங்கல்பம், கும்ப கலச புறப்பாட்டு உடன் காலை 9.15 - 10.15 மணியளவில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 9 மணி முதல் மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையையொட்டி மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    ×