என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா- நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது
- 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
- தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.
இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதிக்கு இணையாக பக்தர்கள் எளிதாக நீண்ட வரிசையில் வெகு நேரம் நிற்காமல் அமர்ந்து ஒய்வு எடுத்து அகன்ற திரையில் படம் பார்த்து தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசன மண்டபம், நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பயணிகள் தங்கும் விடுதிகள் என முடிவுற்ற பணிகளை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை (1-ந்தேதி) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்குகிறது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






