என் மலர்
நீங்கள் தேடியது "thiruchendur"
- திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
- சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட் களால் அபிஷேகம் நடை பெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான இன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் தலையா கடல் அலையா? என கூறும் வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, விநாயகர் போன்ற வேடங்கள் அணிந்து வந்தும் வழிபாடு செய்தனர்.
பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராத னைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாரா தனை நடைபெற்று 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், யானை, சிங்க முகத்தில் வந்த அசுரனை முருகன் வதம் செய்தார். தொடாந்து, சூரனை வேலால் முருகப் பெருமான் வதம் செய்தார்.
பின்னர், 3வதாக தன் முகத்தோடு போரிட வந்த சூரப்மனையும் வதம் செய்தார்.
அப்போது, விண்ணை பிளக்கும் அளவில் பக்தர்களின் அரோகரா கோஷம் இருந்தது.
- 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
- தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.
இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதிக்கு இணையாக பக்தர்கள் எளிதாக நீண்ட வரிசையில் வெகு நேரம் நிற்காமல் அமர்ந்து ஒய்வு எடுத்து அகன்ற திரையில் படம் பார்த்து தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசன மண்டபம், நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பயணிகள் தங்கும் விடுதிகள் என முடிவுற்ற பணிகளை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை (1-ந்தேதி) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்குகிறது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.
- திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
- திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
- வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
619 பேர் தேர்வு
முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர். இதில் 619 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வரவேற்றார்.
பணி நியமன ஆணை
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி. கலந்துகொண்டு தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி. செல்வக்குமார். இவர்களது மகன் அஜய்குமார் (வயது 10).
அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர்.
அப்போது அஜய்குமார் திடீரென கீழே விழுந்தான். அவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஜய்குமார் பரிதாபமாக இறந்தான்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை 2-வது கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பரிசு வழங்கினார்.
- பரிசளிப்பு விழாவுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 42-வது பாவை விழா நடந்தது.
பாடல் போட்டி
இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம் பாவை பாடல் போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, மேலத்திருச்செந்தூரர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, காஞ்சி சங்கரா வித்யாஷ்ரம், குலசேகரபட்டிணம் வள்ளி யம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பண்டார சிவன் செந்தில் ஆறுமுகம் நினைவு நடுநிலை பள்ளி ஆகிய 6 பள்ளி மாணவ, மாணவிகள் 87 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக் கான பரிசளிப்பு விழா திருச்செந்தூர் ஆனந்தவல்லி சமேத சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் நடந்தது. விழாவுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
பதக்கம்-பரிசுகள்
இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் ராம்தாஸ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஓதுவார் கோமதிசங்கர் இறைவணக்கம் பாடி, வரவேற்று பேசினார். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை, 4-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் முதல் 3 பேருக்கும் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பாவை குறித்து முத்தரசு, திருப்பள்ளி எழுச்சி குறித்து இல்லங்குடி, திருவெம்பாவை குறித்து வேலாண்டி ஓதுவார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், கோவில் அலுவலர்கள் ராஜ்மோகன், ரமேஷ், நெல்லையப்பன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோவில் புலவர் மகாமுனி நன்றி கூறினார்.
- நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
- கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்–வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்கள் பா.செல்வம் மற்றும் ச.ஞான அபினாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், வினாடி- வினா போட்டியின் அமைப்பாளர் முத்துக்குமார், வகுப்பு ஆலோசகர் கணேசன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
மேலும் கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
- நவீன் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின், ஆதித்தனார் கராத்தே சிலம்பம் கிளப் சார்பாக வணிக நிர்வாகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜே.நவீன் கலந்து கொண்டார். அவர் திருக்குறளை கூறிக் கொண்டே ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா, உதவி பேராசிரியர்கள் அ.தர்மபெருமாள், ம.ரெ.கார்த்திகேயன், டி.செல்வகுமார், சிலம்பம் பயிற்சியாளர் வி.ஸ்டீபன், கராத்தே சிலம்பம் கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.ரா.ப.தி.முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- வணிக நிர்வாகவியல் துறை சார்பில் “புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் "புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். வணிக நிர்வாகவியல் தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு ஏற்ற வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கருத்தரங்கில் கோவிந்தம்மாள் ஆதிததனார் கல்லூரி, காமராஜ் கல்லூரி, சங்கர பகவதி கல்லூரி, அரசு கலை கல்லூரி, போப் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்லூரியின் முனைவர் பாலு, வேலாயுதம், ரமேஷ், கவிதா, தீபாராணி, கோகிலா, திருச்செல்வம், ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில், வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தர்ம பெருமாள், செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடந்தது.
- நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43 மற்றும் 48 இணைந்து அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கல்லூரியின் நோக்கம், வரலாறு மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு உயா் கல்வி பற்றியும், கல்வி நிலையங்கள் பற்றியும், உயர்கல்விக்கான அரசு உதவி தொகை மற்்றும் வேலைவாய்ப்பு பற்றியும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் துறை ஆய்வகங்கள், நூலகம், சிவந்தி பண்பலை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை காண்பித்து மாணவர்கள் விளக்கினார்கள்.
நிகழ்ச்சியில் 6 அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 60 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முனைவர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்றார். முனைவர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியை கவிதா மற்றும் பேராசிரியர் அபுல்கலாம் ஆசாத் ஆகிேயார் செய்திருந்தனர்.
- கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
- தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.






