என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் முருகன் கோவில்"

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
    • அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பார்க்கிங் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

    அவர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு பக்தர்கள் வாழ்த்துகள் தெரிவித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
    • மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும்.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்த இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோவிலாகும்.

    திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு 'வீரபாகு ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

    முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்மனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 'மாப்பாடு' என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது 'மனப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்மனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

     

    திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்ற 2 மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அளவாய்பெருமான் என்ற 4 உத்சவர்களும் உள்ளனர்.

    இக்கோவிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.

    திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று 2 லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், 'மணியடி' என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.

    மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு 'பாம்பறை' என்ற பெயரும் உண்டு. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.

    இரவு 9.45 மணிக்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.

    தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் 9-வது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.

    • சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
    • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.

    தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.

    அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

    இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.

    திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.

    அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.

    9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.

    அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.

    அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

     

    இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.

    ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.

    ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.

    வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.

    அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.

    10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.

    முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.

    வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.

    திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.

    திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.

    இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.

    மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.

    இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.

    அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்
    • சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

    • 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
    • நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்த சிறந்த பரிகார தலமாகாவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கவுதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி, ராமேஸ்வரம் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.

    • சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
    • குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.

    திருச்செந்தூர்:

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.

    குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


    அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.

    மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
    • 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

    பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
    • வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
    • திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    மதுரை:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.

    பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.

    கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

    இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • பக்தர்களின் காணிக்கை, உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது.
    • வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல் திருச்செந்தூர் கோவிலில் மாடுகளை காணவில்லை என அண்ணாமலை கூறி உள்ளார்

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை.

    அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம்  கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை. 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்?

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • 5 மணி அளவில் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார்.
    • சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    திருச்செந்தூர்:

    மத்திய இணை மந்திரி எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார்.

    இந்நிலையில் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வெளிபிரகாரத்தில் ஆனந்த விலாசம் மண்டபத்தில் நடைபெற்ற சத்ரு சம்கார மூர்த்தி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்கார மூர்த்தி சாமி சன்னதியில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அப்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத், நகர செயலாளர் நவ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×