search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Murugan Temple"

    • திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார்.
    • திருச்செந்தூர் குரு தலமாக கருதப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்டயானைகள், மேதாமலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

    அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, `ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருபெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், தீய பலன்கள் குறையும்.

    தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவு படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப்பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

    வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதை தெளிவு படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவச் சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
    • பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

     அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

    • அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், முன்னிலையில் நடைபெற்றது.

    அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது உண்டியல் எண்ணிக்கையில் ரூ.3 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 501 ரூபாயும், தங்கம் 1 கிலோ 860 கிராம், வெள்ளி 24 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 795-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன் ஆகி யோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். 

    • கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள்.
    • வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெயஆனந்த் என்ற கர்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் கட்டிடம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்களை நான் பதிவு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக என்னிடம் முறையான விளக்கம் கேட்கப்படவில்லை.

    எனது வாழ்வாதாரமே கோவிலில் அர்ச்சகர் பணியை வைத்து தான் உள்ளது. என்னுடைய சமூக வலைதள கருத்துக்கள் தவறு என்று நான் பதிவிட்டும் அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இந்த மாதிரி பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்கும்.

    கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள். அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியதோடு, கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் மனுதாரரை இந்து சமய அறநிலையத்துறையின் இடைக்கால பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • 5 மணி அளவில் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார்.
    • சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    திருச்செந்தூர்:

    மத்திய இணை மந்திரி எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார்.

    இந்நிலையில் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வெளிபிரகாரத்தில் ஆனந்த விலாசம் மண்டபத்தில் நடைபெற்ற சத்ரு சம்கார மூர்த்தி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்கார மூர்த்தி சாமி சன்னதியில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அப்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத், நகர செயலாளர் நவ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களின் காணிக்கை, உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது.
    • வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல் திருச்செந்தூர் கோவிலில் மாடுகளை காணவில்லை என அண்ணாமலை கூறி உள்ளார்

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை.

    அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம்  கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை. 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்?

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
    • திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    மதுரை:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.

    பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.

    கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

    இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்

    இதைத்தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பதியை போன்று திருச்செந்தூரில் பக்தர்கள் அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைப்போன்று ரூ.250 கோடி மதிப்பில் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் முழு அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோவில் வடபுறம் மற்றும் தென்புறத்தில் 2 இடங்களில் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரிகள் நிவாஸ்) கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக சென்று அங்கு நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார அலுவலகத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து கம்ப்யூட்டரில் வரைபடம் மூலம் அமைச்சர் சேகர்பாபுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    திருச்செந்தூர் கோவிலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக நுழைவுவாயிலில் இருந்து கோவில் வரை பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் பேட்டரி காரில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயணம் செய்தனர்.

    முன்னதாக ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். தொடர்ந்து கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி மரம் நடவேண்டும், கோவில் பராமரிப்பிற்கான நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என அறிவுறுத்திார்.

    தொடர்ந்து அவர் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் புகழ்பெற்ற நவக்கிரக ஆலயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை-திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
    நெல்லை:

    தமிழ் மாதமான வைகாசியில் முருகன் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் வருகிறது. அந்த நாளில் திருச்செந்தூர் செல்லும் பஸ்களில் அதிக அளவு கூட்டம் இருக்கும் என்பதால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (06703) நெல்லையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - நெல்லை இடையே இந்த சிறப்பு ரெயிலானது (06704) திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ரெயில்கள் பாளை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவற்றில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

    மேலும் பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர் (16731) மற்றும் திருச்செந்தூர் - நெல்லை (06678) விரைவு ரெயில்களில் வருகிற 13-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர் (06673) மற்றும் பாலக்காடு -திருச்செந்தூர் (16732) விரைவு ரெயில்களில் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ×