என் மலர்
நீங்கள் தேடியது "திருச்செந்தூர் முருகன்"
- சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.
தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.
அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.
திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.
அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.
9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.
அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.
அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.
ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.
ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.
வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.
அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.
10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.
முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.
வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.
திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.
இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.
மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.
இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.
அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்
- சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
- முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும்.
- முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கடற்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார். தன்னிடம் வேண்டி வந்தவர்களின் தீவினைகளை அழித்து வெற்றி அருளுகிறார் இறைவன்.
கோவிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி காட்சி அளிக்கிறார். உற்சவர்களாக ஜெயந்திநாதர், சண்முகர், குமரவிடங்க பெருமான், அலைவாயுகந்த பெருமான் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், பார்வதி தேவி, சுவாமி வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹார மூர்த்தி, பாலசுப்பிரமணியர், மயூரநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சனி பகவான், பைரவர், அருணகிரிநாதர் என அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவருக்கு 'ஜெகநாதர்' என்று பெயர். மூலவருக்கு நடைபெறும் அனைத்து அபிஷேகம் மற்றும் கால பூஜை, தீபாராதனை இவருக்கும் நடைபெறும். முருகனின் வலது கையில் தாமரை மலர் இருக்கும். தாமரை மலரால் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். மூலவருக்கு பின்புறம் சிறுபாதை வழியாக சென்றால் அங்கு பஞ்சலிங்கம் (5 லிங்கம்) இருக்கிறது.
கோவில் வளாகத்தில் வள்ளிக்குகையின் அருகே உள்ள சந்தனமலையில் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய மஞ்சள் கயிறும், குழந்தை இல்லாத தம்பதியர் தொட்டிலும் கட்டி வழிபடுகிறார்கள். மேலும் 'குரு தலம்' என்று அழைக்கப்படும் இக்கோவில் முக்கிய பரிகார தலமாகவும் விளங்குகிறது. குருப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக் கணக்கான பக்தர்கள் மூலவர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவார்கள். கோவிலில் தங்க கொடிமரம், செப்பு கொடிமரம் என 2 கொடிமரங்கள் உள்ளன.
முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மாசி மற்றும் ஆவணி திருவிழா 7-ம் நாள் மாலை மூலவரின் உற்சவரான சுவாமி சண்முகர், வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாகவும், 8-ம் நாள் அதிகாலை வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு அணிந்து பிரம்மா அம்சமாகவும், அன்று பகல் வள்ளி - தெய்வானையுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். எனவே முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
கந்தசஷ்டி திருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். 6-ம் நாள் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறும். 7-ம் நாள் இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதேபோல் பங்குனி உத்திர தினத்தன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
கோவிலில் ஆண்டுதோறும் 2 வருஷாபிஷேக விழா நடைபெறும். சுவாமி மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான தை உத்தர தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான தமிழ் மாதம் ஆனியில் மற்றொரு வருஷாபிஷேகம் நடைபெறும்.
ஆலயத்தில் மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது. முருகப்பெருமானின் மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி ஆகிய சன்னிதிகள் புதிதாக கோவில் நாழிக்கிணறு அருகே கட்டப்பட்டு வருகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் கோவிலில் 2.7.2009-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பந்தலில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
7-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்களுக்கும், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
- பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்செந்தூருக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார்.
சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா சேவைக்காக 4 சக்கர வாகன பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு உபயதாரர் பணிகளை ஆய்வு செய்து பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மற்றும் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிகளில் கலெக்டர் செந்தில்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.
- கோவில் 2000 ஆண்டுகள் பழமை கொண்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்து கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என போற்றப்படும் மிக சிறப்புமிக்க கோயிலாகும்.
பழமையான கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அருகில் அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.
தல வரலாறு
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார்.
அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.
பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
கோயில் அமைப்பு:
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.
ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.
இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.
முருகனின் பெருமைகளை சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம் உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.
இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.
இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
- ஐப்பசி மாத அமாவாசை அன்று யாகத்தை தொடங்கி, 6 நாட்கள் நடத்தினர்.
- கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதர் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வர் இதை சாயாபிஷேகம் என்பர்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.
யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
சஷ்டி யாகம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர்.
உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.
கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
- கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.
- திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார்.
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
முருகனுக்கு மஞ்சள் நீராட்டு
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார்.
அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
மும்மூர்த்தி முருகன்
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
நான்கு உற்சவர்கள்
பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.
சந்தனமலை
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது.
எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
குரு பெயர்ச்சி
திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.
பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.
அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.
இரண்டு முருகன்
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்கு செய்யப்படுகிறது.
தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்
மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.
அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.
இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
திருவிழா
பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.
- முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
- திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
தல வரலாறு:
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார்.
வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
முன்னதாக, மாமரமாக உரு மாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது.
பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.
திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். 'சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்' என்பது பழமொழி.
2 மூலவர்:
எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.
பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.
சிறப்புமிக்க நாழிக் கிணறு:
சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.
ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை:
திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு.
இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.
விபூதிப் பிரசாதம்:
திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான். பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.
இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.
வள்ளிக்குகை:
திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.
இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும்.
வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.
நடுக்கடலில் நடந்த அதிசயம்!
இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.
திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது.
இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.
அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்-ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
தாமரையுடன் கந்தன்:
சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
மாப்பிள்ளை சுவாமி?
பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்-தனி சன்னதிகளும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்-தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறுவடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.
இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள்.
இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
திருவிழாக்கள்:
முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகம், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் கடற்கரையோரம் நடைபெறும். அப்போது, அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் வெள்ளத்தால் கடலே காணாமல்போன உணர்வு நமக்குள் ஏற்படுவது வியப்பு மற்றும், முருகனுக்கு உகந்த எல்லா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
- திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.
சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?
உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.
உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.
உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.
சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?
இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.
அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.
இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.






