search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
    X

    பக்தர்களின் செல்போன்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்ட அறையை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்செந்தூருக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா சேவைக்காக 4 சக்கர வாகன பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு உபயதாரர் பணிகளை ஆய்வு செய்து பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மற்றும் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சிகளில் கலெக்டர் செந்தில்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×